ரோட்டோமேக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோத்தாரி கைது?

விக்ரம் கோதாரியை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ரோட்டோமேக் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரியை சிபிஐ இன்று கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோட்டோமேக் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, அலகாபாத் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளில் 4,232 கோடி ரூபாய் லோன் வாங்கியுள்ளார். அந்த லோனை அவர் முறையாகத் திருப்பிச் செலுத்தவில்லை என்று அவர்மீது வங்கிகள் குற்றம் சாட்டியுள்ளன. வாங்கிய கடனுக்காக விக்ரம் கோத்தாரி வழங்கிய 600 கோடி ரூபாய்க்கான செக் பௌன்ஸ் ஆகிவிட்டது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புகார் அளித்துள்ளது.

இதுதொடர்பாக அவர்மீது எப்ஃஐஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விக்ரம் கோத்தாரி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று செய்திகள் பரவின.

ஆனால், அதை விக்ரம் கோத்தாரி மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‘நான் எங்கும் தப்பிச் செல்லவில்லை. கான்பூரில் எனது குடும்பத்தினருடன் இருக்கிறேன். எனது தொழில்களைக் கவனித்துவருகிறேன். லோன் விவகாரத்தைக் கவனத்தில் வைத்துள்ளேன். இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன். இதுதொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனது செக் பௌன்ஸ் ஆனதைக் காட்டுங்கள் பார்ப்போம். என்மீது அவதூறு பரப்பப்படுகிறது. நான் நீதித்துறையை நம்புகிறேன்’ என்று தன் மீதான புகாரை மறுத்தார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1,400 கோடி ரூபாயும் அலகாபாத் வங்கியில் 352 கோடி ரூபாயும், பேங்க் ஆஃப் இந்தியாவில் 1,395 கோடி ரூபாயும், பேங்க் ஆஃப் பரோடாவில் 600 கோடி ரூபாயும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 485 கோடி ரூபாயும் விக்ரம் கோத்தாரி கடனாகப் பெற்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய சொத்துக்களைப் பறிமுதல்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், விக்ரம் கோதாரியை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close