சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) எம்.பி சஞ்சய் ராவத், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிவசேனா கட்சியின் பெயரையும் அதன் ‘வில் அம்பு’ சின்னத்தையும் “வாங்குவதற்கு” இதுவரை “ரூ. 2000 கோடி பேரம்” நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்
அதன்பின்னர், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு கட்சியின் பெயரும் சின்னமும் வெள்ளிக்கிழமை (பிப்.17) ஒதுக்கப்பட்டது எனக் கூறினார்.
சஞ்சய் ராவத்தின் இந்தப் புகாரை ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் நிராகரித்து உள்ளனர்.
மும்பையில் செய்தியாளர்களிடம் ராவத் கூறுகையில், “சிவசேனா பெயரையும் வில் அம்பு சின்னத்தையும் பெறுவதற்காக கடந்த 6 மாதங்களில் ரூ.2,000 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இது முற்றிலும் வணிக ஒப்பந்தம், தகுதியின் அடிப்படையில் அல்ல; இந்த வணிகத்தில் பெரும் பணம் செலுத்தப்பட்டது” என்றார்.
மேலும் அவர், “எம்எல்ஏக்களின் ஆதரவை வாங்க ரூ.50 லட்சமும், எம்.பி.க்களுக்கு ரூ. ஒரு கோடியும், ஷாகாக்களுக்கு ரூ.5 கோடியும் விலை கொடுத்து வாங்கும் போது, ‘சிவசேனா’ என்ற பட்டத்தையும் வில் அம்பு சின்னத்தையும் பெற அவர்கள் பெரும் பணம் கொடுத்திருப்பார்கள்.
அவர்கள் பாலாசாகேப் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சிக்கு சொந்தமான சிவசேனா பெயரையும் சின்னத்தையும் திருடினர். பணம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது எனது உறுதியான நம்பிக்கை,” என்றார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய சர்ச்சையில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான குழுவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சேனா பிரிவுதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.
ஜூன் 2022 இல், ஷிண்டே, 40 கிளர்ச்சி எம்எல்ஏக்களுடன் சிவசேனாவிலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்தது.
அதன் பின்னர், ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாஜக, சிவசேனா (ஷிண்டே) அணி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/