பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மோசடி! நிரவ் மோடி வீடு, அலுவலகத்தில் சோதனை!

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகளில்

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ. 11,500 கோடி அளவிற்கு நடந்த முறைகேடான பண பரிவர்த்தனையில் தொடர்புடையதாக கூறப்படும், பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.

நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, மும்பையில் உள்ள தங்களது ஒரு கிளையில் மட்டும் மோசடி மற்றும் முறையற்ற கணக்கு என்ற வகையில் ரூ. 11,500 கோடிக்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. யார் இந்த பரிவர்த்தனையை மேற்கொண்டது என்ற விவரத்தை வங்கி வெளியிடவில்லை. ஆனால், அதுகுறித்த தகவல்களை சட்ட அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைத்து இருப்பதாக தெரிவித்தது. எந்தளவிற்கு மோசடி கணக்குகள் வங்கியை பாதிக்கும் என்ற விவரத்தையும் வங்கி வெளியிடவில்லை.

இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.280 கோடி மோசடி செய்ததாக, மும்பையில் வசிக்கும் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி அமி மோடி, சகோதரர் நிஷல் மோடி உள்ளிட்டோர் மீது கடந்த ஜனவரி 31ம் தேதி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நிரவ் மோடி மற்றும் இந்தப் புகாரில் தொடர்புடைய அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முறைகேடான பண பரிவர்த்தனையில் தொடர்புடையதாக கூறப்படும் நிரவ் மோடியின் மும்பை, டெல்லி மற்றும் சூரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நிரவ்வுடன் கூட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கீதாஞ்சலி, கின்னி, நக்ஷத்ரா ஆகிய நகைக் கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சோதனை நடந்து வரும் நிலையில் நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிகிறது.

 

×Close
×Close