மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜனதா தளம் (யுனைடெட்) பாராளுமன்ற உறுப்பினர் ஹரிவன்ஷ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தல் கூட்டத் தொடரின் முதல் நாளில் நடைபெற வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் செயல்முறை செப்டம்பர் 11 ஆம் தேதி முடிவடையும்.
2018 ஆம் ஆண்டில், மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்ததை அடுத்து, தற்போது தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கிடையே இந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக எம்.பி. திருச்சி சிவா போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி, பிஜூ ஜனதா தளம் உட்பட சுமார் 140 எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதில் பாஜக நம்பிக்கையுடன் இருப்பதால் ஹரிவன்ஷ் மீண்டும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 113 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil