பெண்கள், இந்த நவநாகரீக உலகில் சுய சிந்தனை கொண்டவர்களாகவும், பன்முக திறைமசாலிகளாக விளங்குவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் டிரிஷ்டி ஸ்ட்ரீ அத்யயான் பிரபோதான் கேந்தரா என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, இந்தியாவில் பெண்களின் நிலை என்ற ஆய்வுக்கட்டுரையை தயாரித்துள்ளது. அதன் வெளியீட்டு விழா தலைநகர் டில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது, பெண்கள் சுயசிந்தனை கொண்டவர்கள். அவர்களுக்கு எது தேவை என்பதை அவர்களாகவே சுயமாக சிந்தித்து அடைய முற்படுபவர்கள். பெண்களுக்காக, ஆண்கள் யாரும் முடிவை எடுக்க வேண்டியதில்லை. பெண்களின் முன்னேற்றத்திற்கு, ஆண்கள் அவரது பங்களிப்பை செலுத்தினாலே போதுமானது. தக்கநேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் பெண்கள் வல்லவர்கள். பெண்கள் ஒரேசமயத்தில் பல்வேறு வித செயல்பாடுகளை செய்வதில் வல்லவர்கள். சுருங்கச்சொன்னால், அவர்கள் பன்முக வித்தகர்கள்.
இயற்கை. ஆண்களுக்கு வேட்டையாடும் சக்தி, கடினமாக உழைக்கும் திறன் உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளது. ஆனால், அவர்களால் ஒரு செயலை செயல்படுத்தி காட்ட இயலாது. பெண்கள், எதை நினைத்தாலும், அவற்றை செயல்வடிவத்தில் நிகழ்த்திக்காட்டும் திறன் அவர்களுக்கு உண்டு என அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்காக, அனைத்து துறைகளிலும் பெண்கள் என்பதை வலியுறுத்தி சட்டம் கொண்டு வந்தால் கூட பரவாயில்லை என்ற நிலையிலேயே நாம் தற்போது உள்ளோம். ஏனெனில், பெண்களிடம் திறமை இருந்தும், அவர்கள் வெளிஉலகிற்கு வர தயக்கம் காட்டுகின்றனர். இதன்காரணமாக அவர்களின் திறமைகள் வீணாவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
சர்ச்சையில் சிக்கிய மோகன் பகவத் : 2013ம் ஆண்டு இந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கணவன் - மனைவி உறவு குறித்து மோகன் பகவத் கூறிய கருத்து, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவர் அப்போது பேசியதாவது, கணவன் - மனைவி உறவு என்பது ஒரு ஒப்பந்தம் போன்றது. இந்த ஒப்பந்தத்தின்படி, பெண் என்பவர், குடும்பம், வீடு உள்ளிட்டவைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண் என்பவர், மனைவியின் தேவைகளையும் பூர்த்தி செய்பவராக இருத்தல் வேண்டும். முன்னொரு காலத்தில் இந்த ஒப்பந்தத்தை ஆண்கள் போட்டுக்கொண்டு இருந்தனர். தற்போது இந்த ஒப்பந்தத்தை பெண்கள் செயல்படுத்த துவங்கிவிட்டனர். மனைவியுடன் தான் தற்போது கணவன் இருக்கிறார். இந்த ஒப்பந்தத்தை, மனைவி மீறும்பட்சத்தில், கணவர், அவரைவிட்டு பிரிந்து சென்று விடலாம் என்று கூறியிருந்தார். இந்த கருத்து, அப்போது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.