RSS’ Suresh Bhaiyyaji Joshi : ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி நாடு முழுவதும் குடிமக்கள் தேசிய பதிவேட்டை(என்.ஆர்.சி) அரசாங்கம் விரைவில் தயார் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த பதிவேடு வெளியில் இருந்து ஊடுருவியவர்களை வெளிநாட்டினர் என்று அடையாளம் காட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ். எஸ் அமைப்பின் அகில இந்திய செயலர்களுக்கான மாநாடு புவனேஷ்வரில் 3 நாட்கள் நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி ” குடிமக்கள் தேசிய பதிவேடு (என்.ஆர்.சி) தயாரிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். நாட்டுக்குள் பல வெளிநாட்டவர்கள் ஊடுருவியுள்ளனர். எனவே இந்த முறை என்.ஆர்.சி.யைத் தயாரித்து, இந்திய குடிமக்கள் அல்லாத அனைவரும் அடையாளம் காட்டப்பட வேண்டும்.
அதன் பின்பு அவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதை காவல் துறையினர் முடிவு எடுத்துக் கொள்வார்கள். தற்போது வரை அசாமில் மட்டுமே என்.ஆர்.சி தயாரிக்கப்பட்டுள்ளது. இது முழு நாட்டிலும் அமல்படுத்தப்பட வேண்டும்” என்றார். என்.ஆர்.சி. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக இயக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜோஷி “இது ஒரு சமூகத்திற்கு எதிராக இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை” என்றார்.
ஏன் மொத்த நாட்டிற்கு என்.ஆர்.சி வேண்டும் என்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜோஷி, “ஆர்.எஸ்.எஸ் நிலைப்பாடு எப்போதுமே இதுதான். ஊடுருவியவர்கள் இந்திய குடிமக்கள் அல்ல. அவர்கள் வெளிநாட்டினராக அடையாளம் காட்டப்பட வேண்டும். பின்பு அவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார்.
ஒருவாரத்திற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், தேசிய வாதம், அடித்தளக் கொள்கைகள் மற்றும் இந்துத்துவா பற்றி ஆர்.எஸ்.எஸ் நடத்திய கூட்டம் ஒன்றில் பேசி இருந்தார். ”தேசியவாதம் மக்களை பயமுறுத்துகிறது, ஏனெனில் அவர்கள் அதை உடனடியாக ஹிட்லர் மற்றும் முசோலினியுடன் இணைக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் தேசியவாதம் ஒன்றல்ல, ஏனெனில் இந்த நாடு அதன் பொதுவான நாகரித்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இன்னும் சில நாட்களில் அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் அதுக் குறித்தும் சுரேஷ் பய்யாஜி ஜோஷி பேசி இருந்தார். “ அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மீதான தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம்.
ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று மக்கள் நம்பியுள்ளனர். தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமானதாக வரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
தேச விரோத நடவடிக்கைகள் குறித்தும் ஜோஷி பேசினார். “தேச விரோதம் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மக்களுக்கு பாதுக்காப்பான சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.
அயோத்தி வழக்கில் 2010 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுகள் தொடர்பாக 40 நாட்கள் விசாரணைகள் தொடர்ந்தன. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் இடத்தை மூன்று வழியாக பிரிக்க உத்தரவிட்டன. இதுக் குறித்து இறுதி தீர்ப்பை இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெறுவதற்கு முன்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.