கொல்கத்தா உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை முன்னாள் நீதிபதி சித்த ரஞ்சன் தாஷுக்கு முழு நீதிமன்றக் குறிப்பில் பிரியா விடைகொடுத்தது. சித்த ரஞ்சன் தாஷ் 1985 இல் கட்டாக்கில் உள்ள மதுசூதன் சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றார். அவர் உத்கல் பல்கலைக்கழகத்தில் LLM பட்டம் பெற்றார். அவர் 1986 இல் வழக்கறிஞராகப் பதிவுசெய்து, ஒரிசா உயர் நீதித்துறை சேவையின் (மூத்த கிளை) கேடரில் பணியில் சேர்ந்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘RSS taught me that whatever profession you are in, you are working for the nation… Politics not my cup of tea, won’t join it’: Justice Dash
2022 இல், சித்த ரஞ்சன் தாஷ் கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். சுவாரஸ்யமாக, அவரது பிரியாவிடை உரையில், அவர் கடந்த காலத்தில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (RSS) தொடர்புடையவர் என்பதை வெளிப்படுத்தினார். இதற்கு அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் எழுந்தது. இந்தநிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸின் ஸ்வீட்டி குமாருக்கு அளித்தப் பேட்டியில், ஆர்.எஸ்.எஸ்-க்கு மீண்டும் செல்ல விரும்புவதாகவும், ஆனால் அரசியலில் சேர மாட்டேன் என்றும் சித்த ரஞ்சன் தாஷ் கூறுகிறார்.
எப்படி, எப்போது ஆர்.எஸ்.எஸ்.,ஸில் சேர்ந்தீர்கள்?
நான் சிறுவனாக இருந்தபோது மிகவும் குறும்புக்காரனாக இருந்தேன்... ஒரு நாள் நான் இன்னொரு பையனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, ஷாகா பிரசாரக் குழுவைச் சேர்ந்த நந்த் கிஷோர் சுக்லா அங்கு வந்தார். இப்போது, ஓய்வு பெற்ற பிறகு, நான் அவரை (சுக்லா) தேடிக்கொண்டிருக்கிறேன். அவர் உயிருடன் இருந்தால் அவரை சந்திக்க விரும்புகிறேன். சுக்லா தலையிட்டு எங்கள் சண்டையை நிறுத்தினார்... பிறகு ஷாகாவுக்கு வரும்படி அறிவுறுத்தினார். சகிப்புத்தன்மை, பொறுமை, வாழ்க்கையின் முக்கிய மதிப்புகள் போன்ற பல நல்ல குணங்களை நான் ஷாகாவில் பெற்றேன். நீங்கள் எந்தத் துறையில் பணியாற்றினாலும், சாதி, மதம் போன்ற வேறுபாடின்றி அனைவரையும் சமமாகக் கருதி உங்களின் பணியில் உறுதியுடன் இருங்கள் என்பதை அறிந்து கொண்டேன். நீங்கள் எந்தத் தொழிலாக இருந்தாலும் தேசத்திற்காகப் பாடுபடுகிறீர்கள் என்பதை ஷாகா எங்களுக்குக் கற்பித்தது.
உங்கள் பிரியாவிடை உரையில் ஆர்.எஸ்.எஸ் பற்றிக் கூற உங்களைத் தூண்டியது எது?
ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக நான் பல நல்ல பண்புகளைப் பெற்றுள்ளேன், இது எனக்கு நீதி வழங்க உதவியது. என் பிரியாவிடை உரையில் எனக்கு அந்த வார்த்தைகள் தன்னிச்சையாக வந்தது. அப்படி எந்தப் பேச்சும் கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் என்று சொல்ல நினைத்ததில்லை. அப்படிச் சொன்னால் அது சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்று நினைத்தேன். எனது பேச்சுக்குப் பிறகு, நிறைய எதிர்மறையான கருத்துக்கள் வெளிவந்தன, ஆனால் நான் ஓய்வு பெற்றதால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, நான் என்னால் முடிந்ததைச் செய்தேன். நான் யாருக்கும் யாரிடமும் பாரபட்சம் காட்டவில்லை. நீங்கள் முற்றிலும் பாரபட்சமற்ற நபராக மாற விரும்பினால், ஆர்.எஸ்.எஸ்-க்கு செல்லுங்கள் என்று என்னால் சொல்ல முடியும்.
ஆர்.எஸ்.எஸ்., மூலம் நீங்கள் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொண்டது என்ன?
நீங்கள் பார் அசோசியேசனில் கேட்கலாம், என்னுடன் தொடர்புள்ளவர்களிடம் கேட்கலாம்... கடந்த 37 ஆண்டுகளாக நான் ஆர்.எஸ்.எஸ்.,ஸுடன் தொடர்பில்லை. என் தந்தை 53 வயதில் இறந்துவிட்டார். ஆர்.எஸ்.எஸ்-க்கு வேலை செய்ய எனக்கு நேரமில்லை. அதற்குள் வழக்கறிஞராக லைசென்ஸ் எடுத்திருந்தேன். நான் எனது முழு நேரத்தையும் சட்டப் பயிற்சிக்காக அர்ப்பணித்தேன். இப்போதும் எனக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எந்த நபருடனும் தொடர்பு இல்லை. நான் இப்போது சுதந்திரமாக இருப்பதால் அதில் (ஆர்.எஸ்.எஸ்) மீண்டும் சேர விரும்புகிறேன். நான் எப்படிப்பட்டவன் என்பது மக்களுக்குத் தெரியும்.
நீதியரசர்களை அமைப்புகளுடன் தொடர்புபடுத்தக் கூடாது என்ற விமர்சனம் உள்ளது. அதைப் பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
யாரை விமர்சித்தாலும், நான் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், நீங்கள் பிறந்தபோது, நீங்கள் என்ன செய்வீர்கள் என்று உங்களுக்கு ஏதாவது யோசனை இருந்ததா? நீங்கள் பாடகர், நீதிபதி, எழுத்தாளர், அதிகாரி, பேராசிரியர் அல்லது விரிவுரையாளராக மாறுவீர்களா என்று குழந்தையாக இருக்கும்போது உங்களுக்குத் தெரியுமா? நான் நீதித்துறையில் சேருவேன் என்று எனக்கும் தெரியாது. ஒரு நிறுவனம் உங்கள் ஆளுமையை வடிவமைத்திருந்தால், பெஞ்ச்மார்க் குணங்களை உள்வாங்கி, பாசாங்குத்தனமாக இல்லாமல், என்னிடம் உள்ள குணங்களுக்கு பங்களித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். நான் ஒரு நயவஞ்சகனாக இருக்க விரும்பவில்லை, அதனால் நான் அதைக் குறிப்பிட்டேன். எனது 28 வயது வரை ஆர்.எஸ்.எஸ்,ஸில் இருந்தேன், இப்போது எனக்கு வயது 60. நான் 1999 இல் பணியில் சேர்ந்தேன். எனக்கு சேவையில் சேர உதவியது ஆர்.எஸ்.எஸ் அல்ல, ஜனதா தளம் அல்லது பா.ஜ.க அல்லது திரிணாமுல் காங்கிரஸ் அல்ல. அத்தகைய விமர்சனங்களை நான் புறக்கணிக்கிறேன்.
நீங்கள் எப்படி நீதித்துறையில் சேர்ந்தீர்கள்?
எனது 28 வயது வரை நான் ஆர்.எஸ்.எஸ்.,ஸில் இணைந்திருந்தேன். என் தந்தையின் மறைவுக்குப் பிறகு, நீதித்துறை எனக்கு விருப்பத்தால் அல்ல, தற்செயலாக நடந்தது. எனது தந்தை, நீதிபதி ஜக்தேஷ்வர் தாஷ், ஒடிசாவில் புகழ்பெற்ற நீதிபதியாக இருந்தார். நான் நீதித்துறையில் சேர்ந்தால், தான் நிம்மதியாக இறந்துவிடலாம் என்று என் அம்மா நினைத்தார். நான் தகுதியின் அடிப்படையில் தேர்வுக்கு தகுதி பெற்றேன், பின்னர் தகுதியின் அடிப்படையில் வெவ்வேறு பதவிகளை வகித்தேன். நான் 2009 இல் பதவி உயர்வு பெற்றேன், மேலும் பதவி உயர்வுக்காக நான் எந்த நீதிபதியிடம் செல்லவில்லை, வளைந்து கொடுக்கவில்லை. நான் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்றேன். 2022ல் கொல்கத்தா வந்தேன்.
உங்கள் பிரியாவிடை உரையில் ஆர்.எஸ்.எஸ் பற்றிய உங்கள் கருத்துக்குப் பிறகு சிலர் உங்கள் தீர்ப்புகளை கேள்வி எழுப்புகின்றனர். இதைப் பற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
யாராவது அப்படிச் சொன்னால், அவர்களைப் போய் என் தீர்ப்புகளைச் சரிபார்க்கச் சொல்வேன். விதி என்னை வங்காளத்திற்கு இழுத்துச் சென்றது. அவர்களுக்கு சட்ட அறிவு இருக்கிறதா? அவர்கள் தீர்ப்புகளை நன்றாக பார்க்கட்டும். எந்த ஒரு சமூக சார்பையும், அரசியல் சார்பையும் யாராலும் கண்டு பிடிக்க முடியாது. சச்சின் (முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்) ஒரு பந்தை எப்படி அடித்திருக்க வேண்டும் என்று மக்கள் டிவி முன் அமர்ந்து விரிவுரைகளை வழங்குகிறார்கள். வெற்று விமர்சனம் பற்றி நான் கவலைப்படுவதில்லை.
இந்த நாட்களில், பல நிகழ்வுகளில், மக்கள் நேரடியாக நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள், நீதிமன்றம் வழக்கை ஒரு மத்திய நிறுவனத்திடம் ஒப்படைத்து, காவல்துறையைக் கண்டிக்கிறது. அமைப்பு வீழ்ச்சியடைகிறது என்று நினைக்கிறீர்களா?
துரதிர்ஷ்டவசமாக, இது வங்காளத்தில் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும் உள்ளது. பிரச்சனை என்னவென்றால், போலீஸ்காரர்கள் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்காக தங்கள் எஜமானர்களை மகிழ்விப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்... எந்த கிரிமினல் வழக்கும் நீதிமன்றத்தால் முடிவு செய்யப்படுவதில்லை, ஆனால் அது காவல் நிலையத்தால் முடிவு செய்யப்படும் என்று நான் கூறுவேன். வழக்கை தீர்ப்பதற்கு நாங்கள் பயனற்ற இயந்திரங்கள் மட்டுமே. எங்களுக்கு சரியான ஆதாரம் கிடைக்கவில்லை, முறையான வழக்கு விசாரணை எதுவும் கிடைக்கவில்லை, நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களால் எதுவும் செய்ய முடியாது.
ஆர்.எஸ்.எஸ் உடனான உங்களின் தொடர்பிற்கு மீண்டும் வருகிறேன்... ஒரு நீதிபதி ஆர்.எஸ்.எஸ் உடனான தொடர்பை மனதில் வைத்து நீதியை வழங்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
ஆர்.எஸ்.எஸ் யாருடைய மனதிலும் எதையும் திணிக்காததால், நடுநிலையோடு இருப்பது கடினம் அல்ல. சுதந்திர மனதை வளர்க்க ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆளுமையை பயிற்றுவிக்கிறது. நான் நீதித்துறையில் நுழைந்த நாள் முதல், நான் அரசியலமைப்பு மனசாட்சியை உருவாக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்.
பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இடையே என்ன தொடர்பு? ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சகோதர அமைப்பா பா.ஜ.க?
அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானிஜி ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள்... அவர்கள் சியாமா பிரசாத் முகர்ஜியால் கொண்டு வரப்பட்டவர்கள். இதனால் பா.ஜ.க.,வை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சகோதர அமைப்பு என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர். பா.ஜ.க முன்பு கேடர் அடிப்படையிலான அமைப்பாக இருந்தது, ஆனால் இப்போது அது இல்லை. பா.ஜ.க.,வில் இருந்து திரிணாமுல் காங்கிரஸுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க.,வுக்கும் மக்கள் வருகிறார்கள்.
பா.ஜ.க.,வில் சேர வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
நான் மாட்டேன், எனக்கு அரசியல் பிடிக்காது. நான் அரசியலில் சேர மாட்டேன்.
முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் மத குருக்கள் பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக வாக்கு கேட்கிறார்கள் என்று விமர்சித்தார். அதை நீங்கள் எடுத்துக்கொள்வீர்களா?
மத குருக்கள் அரசியல் கட்சிகளுடன் இணைய மாட்டார்கள் ஆனால் அப்படிச் செய்தால் அவர்கள் என்ன தீங்கு செய்கிறார்கள்? (முதலமைச்சர்) மம்தா பானர்ஜியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைக்கிறார்கள், இது தவறா? இதில் நான் தவறேதும் காணவில்லை. இந்திய புராணங்களில், மத குருக்கள் உண்மையான போர்வீரர்கள். சமுதாயத்தை மாற்றும் குணம் அவர்களிடம் உள்ளது. பா.ஜ.க.,வை ஆதரிப்பது சமுதாயத்தை மாற்றுவதற்கு சமம் என்று அவர்கள் நினைத்தால், மிகவும் நல்லது. பத்தாண்டு கால ஆட்சியில் பா.ஜ.க எந்த தவறும் செய்யவில்லை. இந்தியாவை இதுவரை கண்டிராத நிலைக்கு கொண்டு வந்துள்ளது. எல்லோரும் பா.ஜ.க.,வை கேள்வி கேட்கிறார்கள் ஆனால் அது என்ன தவறு செய்தது? யாரோ ஒருவருக்கு (பிரதமர்) மோடிஜியைப் பிடிக்கவில்லை என்பதற்காக, நாடு தவறான கைகளில் உள்ளது அல்லது ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தமல்ல. பேச்சு சுதந்திரம் இல்லை என்றால், பிரதமர் மோடியை விமர்சித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத பத்திரிகையாளர்கள் எப்படி வந்தனர்?
நீங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு திரும்புவது பற்றி பேசினீர்கள். ஓய்வுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்-ல் இப்போது என்ன பங்கு வகிக்கத் தயாராக உள்ளீர்கள்?
நான் ஆர்.எஸ்.எஸ்-க்கு திரும்ப விரும்புகிறேன். நான் சங் அமைப்பிற்காக பணியாற்ற விரும்புகிறேன். அவர்கள் என்னை அணுகினால், நான் செல்வேன். நான் என்ன பொறுப்பு ஏற்பேன் என்று எனக்குத் தெரியாது. எனக்கு நேரம் இருப்பதால், அவர்கள் என்னை அணுகினால், நான் சங் அமைப்பிற்காக வேலை செய்வேன் என்று சொல்ல விரும்புகிறேன்.
முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் சமீபத்தில் பா.ஜ.க.,வில் இணைந்தார்.
அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அரசியலில் சேர வேண்டும் என்று நினைத்தார். நான் அரசியலுக்கு வரமாட்டேன், அது என் விருப்பம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.