சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் கோவிட்-19 சோதனை அறிக்கை கட்டாயம் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள், அவர்கள் புறப்படுவதற்கு முன், அரசாங்கத்தின் ஏர் சுவிதா போர்ட்டலில் தங்கள் கொரோனா பரிசோதனை அறிக்கைகளைப் பதிவேற்ற வேண்டும் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: வழிகாட்டுதல் நெறிப்படி ராகுல் காந்திக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு அரசு பதில்
சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முந்தைய அலைகளின் போது காணப்பட்ட வடிவங்களை மேற்கோள் காட்டி, ஜனவரி மாதத்தில் இந்தியாவில் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. எவ்வாறாயினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் இறப்புகளின் அதிகரிப்பு சாத்தியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"கிழக்கு ஆசிய நாடுகளில் பதிவாகும் எந்தவொரு கொரோனா பாதிப்பு அதிகரிப்பும் சுமார் 10 நாட்களில் ஐரோப்பாவையும், மற்றொரு 10 நாட்களில் அமெரிக்காவையும், மேலும் 10 நாட்களில் பசிபிக் தீவு நாடுகளையும் தாக்கும் என்பதை முந்தைய மூன்று அலைகளின் போது நாங்கள் பார்த்தோம். இந்த அதிகரிப்பு 30 முதல் 35 நாட்களில் இந்தியாவை அடைகிறது. எனவே, ஜனவரி மாதத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்” என்று சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆறு வாரங்களில் உலக அளவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் தொடர்ந்து குறைவாகவே உள்ளன, கடந்த 24 மணி நேரத்தில் 188 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. டிசம்பர் 24 முதல் சர்வதேச பயணிகளின் சீரற்ற மாதிரியை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தியது, கடந்த மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 6,000 பயணிகள் சோதனை செய்யப்பட்டனர். இதில், 39 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், அரசாங்கம் பயணங்களை தடை செய்யவோ அல்லது முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதை அமல்படுத்தவோ விரும்பவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil