உக்ரைனில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத்தில் இருந்து பல மாணவர்கள் நாட்டின் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிப்பதால், வெளியேறுவதற்கு தூதரகங்களால் அறிவுறுத்தப்பட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாகக் கூறுகின்றனர்.
உக்ரைனுக்கும், போலந்துக்கும் இடையிலான ஷெஹினி-மெடிகா எல்லையில், சில இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படுவதற்காக 72 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவிக்கின்றனர்.
வதோதராவைச் சேர்ந்த ஒரு மாணவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து நாங்கள் கடும் குளிரில் காத்திருக்கிறோம், எங்களை போலந்துக்கு செல்ல அனுமதிக்கவில்லை... அவர்கள் ஆண்களையும், பெண்களையும் பிரித்து வைத்துள்ளனர். 40 மணி நேரத்திற்குப் பிறகு சில பெண்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர், ஆனால் அதன் பிறகு, ஒரு இந்தியர் கூட அனுமதிக்கப்படவில்லை.
எங்களை பல்கலைக்கழகங்களுக்குத் திருப்பி அனுப்புங்கள் என்று கேள்விகள் கேட்கும் இந்திய மாணவர்களை அடித்து உதைக்கிறார்கள். எங்களில் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது..."
வதோதராவைச் சேர்ந்த ஞானிஷா படேல், தனது நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை ஷெஹினி சோதனைச் சாவடியை அடைந்தார், திங்கள்கிழமை மாலை உக்ரைனில் இருந்து வெளியேற 36 மணிநேரம் ஆனது.
“செக்போஸ்ட்டைக் கடக்க அனுமதிக்கப்பட்ட பிறகும் நாங்கள் காத்திருக்கச் செய்யப்பட்டோம். வெளியேறுவதற்கு எங்கள் பாஸ்போர்ட்டுகளை முத்திரையிட அவர்கள் தயாராக இல்லை. நாங்கள் இப்போது போலந்துக்கு வந்துவிட்டோம், மேலும் இந்தியத் தூதரகத்தின் மேலதிக அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருக்கிறோம்.
மிகக் குறைவான இந்திய மாணவர்களே கடக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், விமானம் திரும்ப புறப்படுவதற்கு எங்களிடம் போதுமான ஆட்கள் இல்லை. உக்ரைனில் உள்ள எங்கள் நண்பர்கள் ஆபத்தில் உள்ளனர், நாங்கள் அவர்களை நினைத்து கவலைப்படுகிறோம்.
மேலும் உக்ரைன் தலைநகர் கீவில், வதோதராவைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர் ஒருவர் கூறுகையில், இந்திய தூதரகத்தின் ஆலோசனையுடன், மாணவர்கள் வெளியேற முடிவு செய்துள்ளனர். மற்ற எல்லைகளில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாக நாங்கள் கேள்விப்படுகிறோம். அதனால் நாங்கள் இன்னும் பயத்தில் தான் இருக்கிறோம் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“