இந்திய விமானப்படை பீரங்கிகள், ரேடார்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) செயலிழக்கச் செய்யவும் திசை திருப்பவும் எதிர்-UAS வலை ஆகியவற்றைப் பயன்படுத்தி அமைத்த வான் பாதுகாப்பு கவசம், பாகிஸ்தானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இந்திய இராணுவ நிலைகளை அடையவிடாமல் தடுத்தது என்று தகவலறிந்த வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: S-400, Akash missiles key to IAF shield against Pakistan missiles and drones
வியாழக்கிழமை அதிகாலை 1 முதல் 1.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பாகிஸ்தான் ஏராளமான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய பகுதிகளை குறிவைத்து ஏவியதாகவும், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக அந்த அச்சுறுத்தல்களைக் கண்காணித்து அழித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அதன் சிதைந்த பாகங்கள் பல இடங்களில் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்திய ராணுவத் தளங்களை இலக்காக்கி பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் இராணுவ இலக்குகளை குறிவைத்து இந்தியா தாக்கியது. இதன் ஒருபகுதியாக, லாகூரில் உள்ள ஒரு வான்வெளி பாதுகாப்பு ரேடார் அமைப்பை இந்தியா தகர்த்தது. இந்த தாக்குதலில், இந்தியா தனது புதிய "லாயிட்டரிங் மெஷின்கள்” போன்ற இஸ்ரேலிய ஹரோப் (HAROP) மற்றும் ஹார்பி (HARPY) வகைகளைப் பயன்படுத்தியது. இவை தாங்கள் குறிவைத்த இலக்கிற்கு அருகில் காற்றில் "சுற்றி" அல்லது வட்டமிட்டு, பின்னர் இலக்கைத் தாக்கியவுடன் வெடித்துச்சிதறும் திறன் கொண்டவை.
சமீபத்திய தகவல்களின்படி, இந்தியா ரஷ்யாவிலிருந்து 3 படைப்பிரிவு எஸ்-400 ஏவுகணை அமைப்புகளைப் பெற்ற பிறகு, இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் பெறவுள்ள நிலையில், பாகிஸ்தானை எதிர்கொள்ளும் வடக்கு எல்லைகளில் இந்த அதிநவீன ஏவுகணை அமைப்பை நிலைநிறுத்தியுள்ளது.
பாகிஸ்தானால் குறிவைக்கப்பட்ட பெரும்பாலான இராணுவ நிலைகள் லூதியானா, அவந்திப்போரா போன்ற இடங்களில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமானவை என்றும், இராணுவத்தின் தளங்கள் இந்த விமானப்படை தளங்களுடன் இணைந்தே அமைந்துள்ளன என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
எஸ்-400 தவிர, எஸ்-125 பெச்சோரா மற்றும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் உட்பட, மற்ற பல தரை-வான ஏவுகணை அமைப்புகளையும் இந்தியா தனது வான் பாதுகாப்பின் ஒருபகுதியாக வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் நிறுத்தியுள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
கடந்த சில ஆண்டுகளில், இந்திய விமானப்படை மற்றும் இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவு உட்பட, இந்தியா பல்வேறு வகையான ட்ரோன்களைக் கொண்டு தனது ஆயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்தியுள்ளது. இதில் சுற்றித் தாக்கும் வெடிமருந்துகளும் அடங்கும்.