சபரிமலை எச்சரிக்கை: கேரளாவில் பெய்யும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தால் பக்தர்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று கோவில் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
கேரளாவில் வெள்ளம்:
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளா மாநிலத்தின் இடுக்கி, முன்னார், வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் உட்பட பல்வேறு பகுதிகளும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது.
சபரிமலை தேவசம் போர்டு எச்சரிக்கை:
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, சபரிமலைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. நிறைப்புத்தரிசி பூஜைக்காக நாளை மற்றும் நாளை மறுநாள் பக்தர்கள் யாரும் சபரிமலைக்கு வரவேண்டாம் என்றும், மீறி வருபவர்கள் எரிமேலி, பத்தினம்திட்டா, நிலக்கல், பம்பா ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவர் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
கேரளாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு பகுதிகளை முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விரைவில் இடுக்கி அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.