சபரிமலை சன்னிதான பூசாரிகள் பிரம்மச்சாரிகளா? என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பினார்.
உலகிலேயே யாத்ரீகர்கள் பெருமளவு வருகை புரியும் இரண்டாவது பெரிய கோவிலாக சபரிமலை சாஸ்தா சன்னிதானம் வீற்றிருக்கிறது. இக்கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டுமென்று கடந்த செப்.28-ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக பெண்கள் கோவிலுக்கு நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றால், கோவிலின் கதவுகளை இழுத்து பூட்டுவோம் என சபரிமலை சன்னிதானத்தின் தந்திரி கண்டரரூ ராஜீவரு அறிவித்தார். இந்நிலையில், ஐப்பசி மாத பூஜைகளுக்காக அக.17-ம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை ஐப்பன் கோவில், ஐந்து நாட்கள் பூஜைகளுக்கு பிறகு கடந்த அக்.23-ம் தேதி நடை சாத்தப்பட்டது.
கேரளத்தில் போராட்டங்கள் ஓய்ந்திருக்கும் நிலையில், "ஐயப்பன் பிரம்மச்சாரி சரி.. சபரிமலை சன்னிதானத்தின் கதவுகளை இழுத்து பூட்டுவோம் என்று கூறிய தந்திரி பிரம்மச்சாரியா?" என கேரள முதல்வர் கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
சபரிமலை விவகாரம் தொடர்பாக இடதுசாரிகளின் நிலைப்பாடு குறித்த விளக்க பொதுக்கூட்டம் நேற்று பட்டனம்திட்டாவில் நடைபெற்றது. இதில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், "ஐயப்பன் கட்ட பிரம்மச்சாரி என தனது பக்தர்களால் வணங்கப்படுகிறார். இது உண்மை தான். இந்து சமயத்தில் பல பிரம்மாசிரிய கடவுள்கள் உள்ளனர். வட இந்தியாவிலுள்ள இக்கடவுள்களின் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளும் பிரம்மச்சாரிகளாக உள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை.
ஆனால், நமது சபரிமலை சன்னிதான தந்திரியின் பிரம்மச்சரிய லட்சணம் என்னவென்பது தான் உங்களுக்கு தெரியுமே. நான் அவர் குடும்பத்துடன் இருப்பதை குறை கூறவில்லை. ஆனால், சபரிமலை தந்திரி குடும்பம் என்பதையும் தாண்டி, விபச்சாரம் வரையில் சென்றுவிட்டார். எர்ணாக்குளத்தில் என்ன நடந்தது என்பதை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா?" என்று கடுமையான வார்த்தைகளால் சபரிமலை தந்திரியை வறுத்து எடுத்துவிட்டார்.
சபரிமலை சன்னிதான பூசாரிகளில் ஒருவரான தந்திரி கண்டரரூ மோகனரூவை குறிப்பிட்டுத்தான் முதல்வர் பினராயி விஜயன் இவ்வாறு கூறியுள்ளார். 2006ம் ஆண்டு, ஒரு பெண்ணுடன் ஆபாசமான நிலையில் கண்டரரூ மோகனரூ இருந்த படங்கள் வெளியானது. தான் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பெண்ணுடன் இருப்பது போன்ற படங்கள் தயாரிக்கப்பட்டதாக தந்திரி விளக்கமளித்தார்.
ஆனால், இவர் ஒருவருடமாகவே சம்பந்தப்பட்ட பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவரை யாரும் கடத்தவில்லை எனவும், சர்ச்சையில் சிக்குவதற்கு ஒருவருடம் முன்பு வரையில் மட்டுமே 20 முறைக்கு மேல் அவர் அப்பெண்ணை சந்திக்க வந்ததாகவும் போலீஸ் தரப்பு கூறியது.
இச்சம்பவத்தை குறிப்பிட்டுத் தான் தற்போது முதல்வர் பினராயி விஜயன் சூடு கிளப்பியுள்ளார். சபரிமலை சன்னிதானம் திருவனந்தபுரம் தேவஸ்தான போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு தனிநபருக்கோ, குடும்பத்திற்கோ சொந்தமானது அல்ல என, பந்தாள அரச குடும்பத்திற்கு எதிராகவும் பினராயி விஜயன் சீறியுள்ளார்.
பொதுக்கூட்டம் முடியும் தருவாயில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தனது அரசு மேல்முறையீடு செய்யாது என அழுத்தம் திருத்தமாக பினராஜி விஜயன் கூறிச் சென்றது தான் ஹைலைட்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.