மகரஜோதி தரிசனத்துக்கு, சபரி மலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வாகனங்கள் நிறுத்துவது குறித்து முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி நாளில் நடக்கும் மகர சங்கரம பூஜைக்கு முன்னோடியாக சுத்திகிரியை இன்று துவங்குகிறது. மகரவிளக்கு பாதுகாப்பில், 3,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி., அந்தஸ்திலான இரண்டு தனி அதிகாரிகள், சுழற்சி முறையில் பணிகளை கண்காணிக்கின்றனர். சன்னிதானத்தில், போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அங்கு, 24 மணி நேரமும் 100 போலீசார் தயார் நிலையில் உள்ளனர். பாண்டித்தாவளம் உட்பட ஒன்பது இடங்களில், ஜோதி தரிசனம் நடத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோட்டயம் மாவட்ட காவல் தலைமை அதிகாரி இன்று வெளியிட்ட அறிக்கையில், "மகரவிளக்கு பண்டிகையை முன்னிட்டு, சபரிமலைக்கு அதிக அளவிலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதனால், பம்பையில் பார்க்கிங் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. நிலக்கல் பேஸ் கேம்ப்பில் குறிப்பிட்ட அளவே வாகனங்களை நிறுத்த முடியும். எனவே, 13.01.2019ம் தேதி மாலை 4 மணி முதல், 15.01.2019ம் தேதி காலை 8 மணி வரை, தனியார் வாகனங்கள்/டாக்ஸிகள் மூலம் வரும் பக்தர்கள் எருமேலியில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் பார்க்கிங் செய்துவிட்டு, கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் மூலம் பம்பைக்கு செல்ல வேண்டுகிறோம்.
எருமேலி பார்க்கிங் ஃபுல் ஆகும் பட்சத்தில் எளங்குளம் கோயில் மைதானத்தில் பார்க்கிங் செய்ய இடம் அளிக்கப்படும். அதேபோல் பொன்குன்னம் பகுதியிலும் பார்க்கிங் செய்யலாம். பக்தர்கள், பொன்குன்னம் பேருந்து நிலையத்தில் இருந்து கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் மூலம் பம்பைக்கு செல்லலாம்.
இடுக்கியிலிருந்து முண்டக்கயம் வழியாக வரும் பக்தர்கள் வண்டிபெரியார் / வண்டிதவளம் பகுதியில் வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டு கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் மூலம் பம்பைக்கு வர வேண்டுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.