சபரிமலை விவகாரம் : 2018ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் போகலாம் என்ற வரலாற்று தீர்ப்பினை அளித்தது உச்ச நீதிமன்றம்.
ஆனால் அதற்கு இந்து அமைப்பினர், பல்வேறு தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வந்தனர். இந்நிலையில் மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டினை சேர்ந்த பிந்து மற்றும் கனக துர்கா என்ற இரு பெண்கள், ஜனவரி 2ம் தேதி ஐயப்பனை நேரில் சென்று தரிசித்து வந்தனர்.
மேலும் படிக்க : சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த கேரள பெண்கள்
இதனால் கேரளாவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் முழு நேர கடையடைப்பிற்கு இந்து அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். பாஜக மற்றும் இடதுசாரி இயக்கத்தினருக்கும் இடையே பெரிய அளவில் போராட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து சந்திரன் என்பவர் மரணமடைந்தார். பின்பு மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. ஆங்காங்கே அரசு பேருந்துகள் சேதாரத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் கண்ணூர் மற்றும் இதர பகுதிகளில் வன்முறையால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேரள அரசிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் இதுவரை எந்த விதமான அறிக்கையும் சமர்பிக்கப்படவில்லை என்று கூறினார் அவர்.
"பாஜக தரப்பில், நடந்த வன்முறைக்கெல்லாம் இடதுசாரி கட்சி தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். பக்தர்கள் குறித்தும், இந்து சமூகம் குறித்ததுமான பிரச்சனை இது. இதை மிகவும் சுமூகமாக கையாளாமல், பிரச்சனையை உருவாக்கி, பக்தர்களை காயப்படுத்தி, ஒருவரின் மரணத்திற்கும் கேரள அரசு காரணமாகியுள்ளது" என்று பாஜக செய்திதொடர்பாளர் GVL ராவ் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
சபரிமலை விவகாரம் : மோசமான தாக்குதலுக்கு ஆளான கண்ணூர்
ஒரு நாள் முழு அடைப்பு மற்றும் போராட்டத்தில் பெருத்த சேதாரத்தை சந்தித்தது கண்ணூர் மாவட்டம் தான். இடதுசாரி இயக்கத்தினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு மத்தியில் பெரும் கலவரம் உண்டானது.
தலசேரியில் இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. டி.ஒய்.எஃப்.ஐ தலைவரை யாரோ குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு, மாநிலங்களவை உறுப்பினர் வி. முரளிதரன், மற்றும் என். ஹரிதாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் சி. சந்திர சேகரன் உள்ளிட்டோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
கண்ணூர், செருதழம் பகுதியில் அமைந்திருந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
பத்தினம்திட்டாவில் இருக்கும் அதூர் பகுதியில் மூன்று நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கண்ணூரில் மட்டும் 169 வழக்குகள் பதிவாகியுள்ளன. 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,286 வழக்குகள் கேரளா முழுவதும் நடந்த வன்முறையின் போது போடப்பட்டுள்ளது. 3,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 487 பேர் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றனர்.
இது குறித்து பேசுகையில் பினராயி விஜயன் “கேரளத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் அனைத்தும் முன்னரே திட்டமிடப்பட்டு, சங்கிகளால், கேரளாவின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதற்காக நடத்தப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.