கேரளாவில் வெள்ளத்திற்கு பிறகு இன்று மாலை 5:00 மணிக்கு சபரிமலை கோவில் திறக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை கோவில் மீண்டும் திறப்பு:
கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பால் ஒட்டுமொத்த மாநிலமும் நிலைக்குலைந்தது. இந்நிலையில் பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலை கோயில் முழுவதுமாக வெள்ளநீரில் மூழ்கியது. அதனைத் தொடர்ந்து, சீரமைப்பு பணிகள் நடைபெற்று தற்போது கேரள மாநிலம் இயல்பு நிலைக்கு மாறிவருகிறது.
இந்நிலையில், கேரள காலண்டர் படி கன்னி மாதம் என அழைக்கப்படும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலையின் மேல்சாந்தி உன்னிகிருஷ்ண நம்பூதிரி நடையை திறந்து வைத்து நெய்விளக்கு ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடந்து 6 நாட்கள் நடைபெறும் இந்த பூஜைக்கு பிறகு வரும் 21-ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை வழிப்பாட்டிற்கு யாரும் வரவேண்டாம்; மீறி வந்தால் திருப்பி அனுப்பப்படுவீர்கள் : கோவில் தேவசம் போர்டு வெள்ளத்தின்போது கொடுத்த அறிவிப்பு குறித்த செய்திக்கு
வெள்ளத்திற்கு பிறகு நடைபெறும் பூஜை என்பதாலும் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாததாலும் பக்தர்களுக்கு பலவிதமான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பம்பை ஆற்றைக் கடக்கக்கூடாது, உணவு, குடிநீா் கொண்டு வரவேண்டும். காடுகளுக்குள் செல்லக் கூடாது. புதை குழிகள் இருப்பதால் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேவசம் போா்டு விதித்துள்ளது.