கேரளாவில் இருக்கும் சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்ற ஒரு நடைமுறை வெகு நாட்களாக இருக்கிறது.
10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே இதுவரை கோவிலிற்குள் அனுமதித்திருக்கிறது கோயில் தேவஸ்தானம்.
இதற்கு எதிராக ஆங்காங்கே பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். கடந்த ஜனவரி மாதம் திருவிதாங்கூர் தேவஸ்தானம், கோயிலுக்கு வரும் பெண்கள் தங்களின் வயதினை உறுதி செய்வதற்கு சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என்று கூறியது.
இதனை எதிர்த்து பதிய பட்ட வழக்கினை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசுட், ஆர்.எஃப். நரிமன், ஏ.எம் கான்வில்கர், மற்றும் இந்து மல்ஹோத்ரா விசாரித்தார்கள்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களின் வாதங்களை முன்வைக்குமாறு இரு தரப்பினரிடமும் கேட்டுக் கொண்டார்கள்.
வாதங்கள் முன்வைக்கப்பட்ட பின்பு, நீதிபதி சந்திரசுட் ஆண்களுக்கு கோயிலுக்குள் செல்ல எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை பெண்களுக்கும் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் எதன் அடிப்படையில் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றீர்கள் என்றும் கேட்டார்.
பின்பு "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமை இருப்பதாக கூறி, ஒரு கோயிலை பொதுமக்கள் வழிப்பாட்டிற்காக திறந்தால் அதில் ஆண்கள் பெண்கள் என்ற பேதம் பார்க்கக் கூடாது" என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கேரள அரசு தரப்பு வழக்குரைஞர்கள் "பெண்களை கோயிலிற்குள் அனுமதிப்பதற்கு முழு ஆதரவினையும் அளிக்கும்" என்று கூறினார்கள். மேலும் தேவாஸ்தானமும் அரசின் கொள்கைகளுக்கு முழு ஆதரவினையும் தர இருக்கிறது. எனவே இன்றைய தீர்ப்பினை முழு மனதாக ஏற்றுக் கொண்டு நடைமுறைபடுத்த விரும்புகிறோம் என்று குறிப்பிட்டார்கள்.