scorecardresearch

வெளிநாட்டு நிறுவனத்தில் சட்ட விரோதமாக முதலீடுகளை வாங்கினாரா சச்சின்? – அதிர வைக்கும் புலனாய்வு முடிவுகள்!

சச்சின், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மாமனார் ஆனந்த் மேத்தா ஆகியோர், விர்ஜின் தீவுகளில் இயங்கிய சாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தால் பலனடைந்து வந்தது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனத்தில் சட்ட விரோதமாக முதலீடுகளை வாங்கினாரா சச்சின்? – அதிர வைக்கும் புலனாய்வு முடிவுகள்!

கடந்த 2015ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் (panama papers) வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) ஆவணங்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists (ICIJ)) மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுகல்கர், அவரது குடும்ப உறுப்பினர்களுடன பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் உள்ள நிறுவனத்தால் பலனடைந்துள்ளது பண்டோரா பேப்பர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பண்டோரா பேப்பர் ஆய்வின் ஒரு பகுதியாக, பனாமா சட்ட நிறுவனமான அல்கோகலின் விசாரணை அறிக்கைப்படி, சச்சின், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மாமனார் ஆனந்த் மேத்தா ஆகியோர், விர்ஜின் தீவுகளில் இயங்கிய சாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்துள்ளனர்.

பண்டோரா ஆய்வில், சாஸ் நிறுவனம் 2007 இல் தொடங்கப்பட்டு, 2016இல் மூடப்பட்டது வரையிலான விரிவான ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு கிடைத்த பலன்கள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளன.

சாஸ் நிறுவனம் மூடப்பட்ட சமயத்தில், சச்சின் டெண்டுல்கர் குடும்பம் வைத்திருந்த பங்குகளின் விவரங்கள்: சச்சின் டெண்டுல்கர் (9 பங்குகள்): $ 856,702, அஞ்சலி டெண்டுல்கர் (14 பங்குகள்): $ 1,375,714, ஆனந்த் மேத்தா (5 பங்குகள்): $ 453,082

சாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் மூடப்பட்ட போது, அதன் பங்குகள் மார்க்கெட் விலையை காட்டிலும் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. பங்குகளின் சராசரி திரும்ப விலை சுமார் $ 96,000 ஆக இருந்துள்ளது. நிறுவனம் மூடப்பட்ட சமயத்தில், அதன் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.

அதில், அஞ்சலி டெண்டுலகர் 60 பங்குகளுடன் முதல் பங்குச் சான்றிதழையும், அவரது தந்தை 30 பங்குகளுடன் இரண்டாவது பங்கு சான்றிதழையும் பெற்றுள்ளார். மீதமுள்ள பங்குகளை திரும்பப் பெறுவதற்கான விவரங்கள் கிடைக்கவில்லை. 90 பங்குகளின் மதிப்பு $ 8.6 மில்லியன் (தோராயமாக ரூ. 60 கோடி) என சொல்லப்படுகிறது.

பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான மூன்று மாதங்களில் விர்ஜின் தீவுகளில் உள்ள நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தை விற்கும்போது, வாலண்டரி லிக்விடேடராக (தானாக முன்வந்து நிறுவனத்தை விற்பனை செய்பவர்) பணமா நாட்டைச் சேர்ந்த ஜான் பி பாஸ்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது வெளியிடப்பட்ட நிறுவனத்தின் நிதி நிலைமை பத்திரத்தில், நிறுவனத்தின் சொத்து மதிப்பு கடனுக்கு சமமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக என குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 31-ஆம் தேதி 2017ஆம் ஆண்டு நிறுவனம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிறுவனத்தை விற்க சம்மதம் தெரிவித்து அதன் பங்குதாரர்கள் ஆன சச்சின் டெண்டுல்கர் அஞ்சலி டெண்டுல்கர் ஆனந்த் மேத்தா ஆகியோர் கையொப்பமிட்டு இருந்தனர்.

பரஸ்பர சட்ட உதவி 2003 இன் படி, சாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் விற்ற பிறகு எதிர்காலத்தில் அதுகுறித்த ஆவணங்களும் தரவுகளும் எங்கிருக்கிறது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

ஜூலை 15, 2016 ஆம் தேதி நிறுவனத்தின் பங்குகளின் விற்பனை தொடங்கப்பட்டபோது, வெளியான பத்திரத்தில் இது குறித்த ஆவணங்களை எல்ஜி மேனேஜ்மென்ட் இன் நியூசாடேல், சுவிட்சர்லாந்து பராமரிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர் மிருன்மோய் முகர்ஜியிடம் பேசுகையில், ” சாஸ் நிறுவனத்தில் சச்சினின் முதலீடு சட்டப்பூர்வமானது. இது Liberalised Remittance Scheme திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வரி முறையாக கணக்கிடப்பட்டு வரி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

எல்ஆர்எஸ் திட்டத்தின் கீழ், மார்ச் 2007 நிலவரப்படி, ஒரு நபர் $ 100,000 செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், அது பல்வேறு கட்டங்களாக அதிகரிக்கப்பட்டு மே 2015 இல் $ 250,000 வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய அவர், ” பணமோசடி, வரி ஏய்ப்பு போன்றவற்றில் ஈடுபடுவர்களை கண்டறிவது தான், ஐசிஐஜேயின் நோக்கமாகும். ஆனால், இந்த விவகாரத்தில் சச்சினின் முதலீடு முறையானது ஆகும். அந்த முதலீடு அவரது வருமானத்திலிருந்தே செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு வரி செலுத்திய ஆவணங்கள் தெளிவாக இருப்பதால், உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டது போல, எவ்வித குற்றச்செயல்களில் சச்சின் ஈடுபடவில்லை .

அதே போல, அறிக்கையில் ரூ. 60 கோடி தொகை முற்றிலும் தவறானது. நிறுவனம் கலைக்கப்பட்ட போது, சச்சின் முதலீடு வாங்கிய தொகை விவரங்கள், வரி வருமானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் சட்டத்திற்குட்பட்டு வாங்கிய முதலீடுகளில் சட்டவிரோதமான முறைகேடான உள்நோக்கம் இருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமமோ ஐசிஐஜே கூட்டமைப்போ தெரிவிக்கவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Sachin tendulkar pandora paper panama expose