பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய வழக்கில் முக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட நபரை மும்பை போலீசார் இன்று காலை தானேவில் வைத்து கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அவர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர், முறையான இந்திய அடையாள அட்டை இல்லாதவர் என்பதும் முதன்மை ஆதாரமாகத் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷாஜாத் (30) தனது வங்கதேச பூர்வீகத்தை மறைக்க இந்தியாவிற்குள் நுழைந்த பின்னர் தனது பெயரை விஜய் தாஸ் என்று மாற்றிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் தீட்சித் கெடம் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவரை நேற்று இரவு தானேயில் இருந்து கைது செய்தோம். அவர் முகமது இஸ்லாம் என்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் இந்தியாவுக்கு வந்தற்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அவருக்கு எதிராக பாஸ்போர்ட் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மேலும் அவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காட்ட சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்றார்.
முகமது இஸ்லாமுக்கு எதிராக எந்த முன் குற்றப் பதிவும் இல்லை. கொள்ளை முயற்சி செய்யப்பட்ட வீடு சயிப் அலிகானின் வீடு என்பது அவருக்கு தெரியாது என்றும் துணை போலீஸ் கமிஷனர் கூறினார்.
சனிக்கிழமை மாலை சந்தேக நபரை போலீஸார் அடையாளம் கண்டுகொண்டதாகவும், அதன் பின்னர் அவரின் தொலைபேசியை கண்காணிக்க ஆரம்பித்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னதாக, அவரது அடையாளம் தெரியாமல் போலீசார் குழப்பத்தில் இருந்தனர், ஆனால் டாதரின் சிசிடிவி காட்சிகள் விசாரணையில் தங்கள் திசையை மீண்டும் பெற உதவியது.
ஒரு மொபைல் கடையில் இருந்து அவர் ஒரு மொபைல் கவர் வாங்குவது தெரிந்தது. பின்னர் போலீசார் சிசிடிவி மூலம் அவரை தொடர்ந்து கண்காணித்து, வொர்லி கோலிவாடா பகுதியில் உள்ள அவரது குடியிருப்பைக் கண்டறிந்தனர், அங்கு அவர் ஐவருடன் ஒரு அறையில் வசித்து வந்தது தெரிந்தது.
விசாரணை மற்றும் அவரது மொபைல் பதிவுகளின் அடிப்படையில், அவர் தானேயில் உள்ள தொழிலாளர் முகாமுக்குச் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். கிட்டத்தட்ட 20 குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சந்தேக நபரைத் தேடத் தொடங்கின. ஆனால், அங்கிருந்து தப்பி ஓடிய முகமது, சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தனது மொபைல் போனை அணைத்துவிட்டார். அவரைத் தேடுவதற்காக மும்பை காவல்துறையைச் சேர்ந்த சுமார் 100 அதிகாரிகளும் அந்த இடத்தில் குவிந்தனர்.
டிசிபி நவ்நாத் தவாலே தலைமையிலான குழுவினர் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த சந்தேக நபரை வெற்றிகரமாகக் கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் இன்று காலை முறைப்படி கைது செய்யப்பட்டார்
ஆங்கிலத்தில் படிக்க: Saif Ali Khan attacker is Bangladeshi national who changed his name after entering India: Mumbai police