இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்து வந்த உர்ஜித் படேல் தன்னுடைய பதவியை நேற்று ராஜினாமா செய்தார். 'வங்கிகளில் வாராக்கடன் அதிகமானதற்கு காரணம் இந்திய ரிசர்வ் வங்கி தான்' என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரிசர்வ் வங்கியின் மீது குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து சொந்த காரணங்களுக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக உர்ஜித் படேல் அறிவித்தார்.
உர்ஜித் படேல் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி ஏற்றார். பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு வருடம் நிலையில் இப்படியான முடிவினை அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்றைய பங்குச்சந்தையில் அந்த பாதிப்பின் எதிரொலி இருந்தது.
இந்நிலையில், மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளரும், மத்திய நிதிக்குழுவின் உறுப்பினருமான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மூன்றாண்டுகளுக்கு இந்த பதவியில் இவர் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தமிழக அரசில் தொழில்துறை முதன்மை செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.