அரியவகை மான்களை வேட்டையாடியதாக சல்மான் கான் மற்றும் நான்கு பேர் மீதான வழக்கில் இன்று ராஜஸ்தான் ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பில், அரியவகை கருப்பு மானை வேட்டையாடியது சல்மான் கான் என்று நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர் குற்றவாளி என அறிவித்துத் தீர்ப்பு வெளியானது. மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மீதமுள்ள சைஃப் அலி கான், சொனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் கொதாரி ஆகிய நான்கு பேரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
1998ம் ஆண்டு படப்பிடிப்பிற்காக சல்மான் கான் மற்றும் படக்குழுவினர் ராஜஸ்தான் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த அரியவகை கருப்பு மான்களை சல்மான் வேட்டையாடியதாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில் சைஃப் அலி கான், சொனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் கொதாரி ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. மேலும் உரிமம் காலாவதியான துப்பாக்கியை அவர் உபயோகித்ததாகவும் கூறப்பட்டது.
இதனால் அவர் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து பின்னர் அந்த வழக்கு கைவிடப்பட்டது.
முன்னதாக இதே மான் வேட்டை வழக்கில் மேலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சல்மான் கான் உட்பட 7 பேருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஒரு வாரக் காலம் சிறையில் இருந்த சல்மான் கானை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதனிடையே இந்த வழக்கின் தீர்ப்பு இன்று தெரிவிக்கப்பட்டது. 5 ஆண்டு சிறை தண்டனையை அடுத்து அவரை போலீசார் ஜோத்பூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.