Sukrita Baruah
இந்தியாவின் பன்முகத்தன்மையை வலியுறுத்த விரும்பும் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் புதிய கருத்துக்கள், பிரதமர் மற்றும் வடகிழக்கு மாநில பா.ஜ.க முதல்வர்களிடமிருந்து கடுமையான எதிர்வினையைத் தூண்டியது. தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், சாம் பிட்ரோடா, "கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Won’t tolerate insult on basis of skin colour’: PM Modi hits out at Sam Pitroda’s ‘look like Chinese’ remark
புதன்கிழமை ஒரு பேரணியில், சாம் பிட்ரோடாவின் கருத்துகளைக் குறிப்பிட்டு, “ஷேஜாதா (ராகுல் காந்தியைப் பற்றிய குறிப்பு) பதிலளிக்க வேண்டும். தோலின் நிறத்தின் அடிப்படையில் நமது குடிமக்களை அவமதிப்பதை தேசமும் மோடியும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்,” என்று பிரதமர் மோடி கூறினார்.
அஸ்ஸாம் முதலமைச்சரும், பா.ஜ.க தலைமையிலான வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மாவும் இந்தக் கருத்துக்களைச் சுட்டிக்காட்டி, “சாம் பாய். நான் வட கிழக்கைச் சேர்ந்தவன், நான் ஒரு இந்தியர் போலவே இருக்கிறேன். இந்தியா பன்முகத்தன்மைக் கொண்ட நாடு - நாம் தோற்றத்தில் வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் நாம் அனைவரும் ஒன்று. நம் தேசத்தைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.
மணிப்பூரின் பா.ஜ.க முதல்வர் என் பிரேன் சிங் மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்தார் மற்றும் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களை "இனவெறி" என்று அழைத்தார்.
“வடகிழக்கு மக்களுக்கு எதிரான காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் இனவெறி கருத்தை நான் கண்டிக்கிறேன். பிரித்து ஆட்சி செய்யும் கொள்கையால் இந்தியாவை பிளவுபடுத்த காங்கிரஸ் எப்போதும் முயற்சி செய்து வருகிறது. ஆனால், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது, எப்போதும் இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கேலி செய்வது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று கூறிய பிரேன் சிங், இந்திய தேசிய காங்கிரஸும் சாம் பிட்ரோடாவும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரினார்.
காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ், சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் கட்சியை விலக்கி வைத்தார்: “இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா ஒரு பேட்டியில் கூறிய ஒப்புமைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த ஒப்புமைகளிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக் கொள்கிறது,” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
கடந்த மாதம் சாம் பிட்ரோடா, அமெரிக்காவில் பரம்பரை வரி என்பது ஒரு சுவாரஸ்யமான சட்டம் என்றும், இந்தியாவில் உள்ள மக்கள் இதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் கூறி சர்ச்சையை கிளப்பினார். இதை பா.ஜ.க ஒரு தேர்தல் பிரச்சினையாக மாற்றியது, தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் இந்த விவகாரத்தைக் கொண்டு வந்தார்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் பரம்பரை வரியை விதிக்கும் என்றும் வாக்காளர்களின் குழந்தைகளின் பரம்பரைச் சொத்துக்களைப் "பறிக்கும்" என்றும் விமர்சித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“