Congress: காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவரும், காந்தி குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பை கொண்டவருமான சாம் பிட்ரோடா, இந்தியாவின் பன்முகத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் அரசியல் ரீதியாக நிறவெறி கருத்துகளை தெரிவித்தார். அவர் வட இந்தியர்கள் வெள்ளையர்கள் போன்றும், தென்இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்றும் உள்ளனர் என்று நிறவெறியைத் தூண்டும் கருத்துக்களை தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Amid row over controversial remarks, Sam Pitroda steps down as chairman of Indian Overseas Congress
இந்தியாவின் பன்முகத்தன்மையை வலியுறுத்தி, சாம் பிட்ரோடா, தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவுக்கு கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களாகவும், தென்னிந்தியாவில் உள்ள மக்கள் தென் ஆப்பிரிக்கர்களைப் போல தோற்றமளிக்கிறார். அது முக்கியமில்லை. நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்." என்று அவர் கூறினார்.
இந்நிலையில், சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பா.ஜ.க-வின் முதல்வர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் பதவியை சொந்த விருப்பத்தின் பேரில் சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளதாகவும், அவரது ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து கட்சியை விலக்கி, “இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக திரு சாம் பிட்ரோடா ஒரு போட்காஸ்டில் வரைந்த ஒப்புமைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த ஒப்புமைகளிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக் கொள்கிறது." என்று கூறினார்.
சாம் பிட்ரோடாவின் இந்த கருத்து, தேர்தல் நேரத்தில் காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி ஆரம்பத்தில் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து விலகியிருந்தாலும், சேதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வந்துள்ளது. அவரது ராஜினாமாவுடன், கட்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறது மற்றும் இந்த சர்ச்சை பிரச்சாரத்தை சிதைக்க விடக்கூடாது என்றும் காங்கிரஸ் தலைமை நம்புகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“