Same Sex Marriage Tamil News : 2006-ம் ஆண்டில், இந்தியாவில் ஓரினச்சேர்க்கை ஒரு குற்றமாக இருந்தபோது, மனநல மருத்துவரான கவிதா அரோரா மற்றும் உளவியலாளரான அங்கிதா கண்ணா டெல்லியில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான மனநல மையத்தில் பணிபுரிந்தபோது சந்தித்துள்ளனர். 47 வயதான அரோரா, ஓர் பழமைவாத குடும்பத்திலிருந்து வந்தவர். டெல்லியின் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் ஓர் பாடமாக மட்டுமே ஓரினச்சேர்க்கை பற்றிப் படித்தார். அவருடைய பெற்றோர் அவருக்காக ஒரு வரனைத் தேடத் தொடங்கியபோது, அரோரா கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாகப் பல ஆண்களைச் சந்தித்தார். ஆனால் "அவை எதுவும் ஒருபோதும் சரியாக இருக்கவில்லை". “இணைய சகாப்தத்திற்கு முன்பு ஓர் இளம் பெண்ணாக, ஓரினச்சேர்க்கையை எனக்காக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் உள்ளே அனுபவிப்பது கூட உண்மையானது என்று நினைப்பதை என்னால் அனுமதிக்க முடியவில்லை” என்று அவர் கூறுகிறார்.
அரோரா தன்னுடைய முப்பது வயதுகளிலிருந்தபோதுதான், அவர் பெண்கள் மீது ஈர்க்கப்படுகிறார் என்பதை உணர்ந்தார். அது அவரை "முழுமையாக" விடுவித்தது. மறுபுறம், 36 வயதான கன்னா, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவர் மீதும் ஈர்க்கப்படுகிறார் என்பதை சிறு வயதிலிருந்தே அறிந்திருந்தார். அவர் முசோரி மற்றும் டெஹ்ராடூனில் வளர்ந்தவர். அங்கு அவருடைய கல்வியாளர் பெற்றோர்கள் அவருக்கு ஓர் சுய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 2007-ம் ஆண்டில், அரோரா மற்றும் மேலும் இருவரால் நிறுவப்பட்ட மனநல சுகாதார மையமான சில்ட்ரன் ஃபர்ஸ்டி சென்டரில் சேருவதற்கு முன்பு கன்னா பள்ளி ஆலோசகராக பணியாற்றினார்.
“அந்த நாட்களில், நான் ஒருபோதும் கவிதாவை விரும்பவில்லை. ஒருவரைத் தீவிரமாக விரும்பாதது எனக்கு அரிதாக இருந்தது. எனவே, தற்போது இது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பின்னோக்கிப் பார்த்தால், இது நான் உணர்ந்ததற்கு நேர்மாறாக இருக்கிறது” என்கிறார் கன்னா. ஜனவரி 2012-ல், தன்னுடைய புதிய ஆண்டு தீர்மானங்களில் ஒன்றாக, அவர்கள் இருவரும் ஓர் சிறந்த பணி உறவைக் கொண்டிருக்கவேண்டும் எனக் கண்ணா அரோராவிடம் கூறினார். இதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக நேரம் செலவிடத் தொடங்கினர். பிறகு அது காதலாக மாறியுள்ளது.
அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக இருக்கிறார்கள். ஒரு ஜோடியாக தங்கள் குடும்பங்களை கவனித்துக்கொள்கிறார்கள் மற்றும் வீட்டுச் செலவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பாலின தம்பதிகள் ஒரு கூட்டு வங்கிக் கணக்கைத் திறப்பது அல்லது வசித்ததற்கான ஆதாரம் பெறுவது போன்ற எளிய விஷயங்கள் சவாலாகவே இருக்கின்றன.
"கோவிட் -19-ன் போது, எங்கள் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளில் ஒருவருக்கொருவர் பரிந்துரைக்க விரும்பினோம். ஆனால், அது சாத்தியமற்றது என்பதை பிறகு உணர்ந்தோம். திருமணமான தம்பதிகளைப் பாதுகாக்கும் சட்ட ஆட்சி எங்களுக்கு அப்படியே கிடைக்கவில்லை” என்கிறார் அரோரா.
இந்தியாவில் ஓரினச்சேர்க்கை ஒழிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், அரோராவும் கண்ணாவும் ஒரு ஜோடி என்பதை சமூகம் புரிந்து கொள்ள முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் பெரும்பாலும் அவர்களை சகோதரிகளாகவோ அல்லது நண்பர்களாகவோ பார்க்கின்றனர். உள்ளூர் வாங்கி அவர்களைத் தாய் மற்றும் மகள் என்று அழைக்கின்றனர். அவர்கள் மனைவியாக இருந்தால் எளிதாக இருக்குமா? கடந்த ஆண்டு அக்டோபரில், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். "ஓர் ஜோடிக்குள் ஒருவருக்கொருவர் வழங்கும் அர்ப்பணிப்பு, ஆதரவு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் சட்டப்பூர்வ பாதுகாப்பு மற்றும் சமூக அங்கீகாரத்தைத் திருமணம் வழங்குகிறது. இது கோவிட் -19 தொற்றுநோயின் காலங்களில் இன்னும் முக்கியமானது" என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த நடவடிக்கை இந்தியாவின் LGBTQ + சமூகத்திற்குப் பரவலான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். “ஓர் ஓரினச்சேர்க்கையாளரை காதலித்து திருமணமான தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பிலிருந்து விலக்க முடியாது. இந்த மனு ஓரினச்சேர்க்கை அடையாளத்தைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்குவதற்கான ஒரு முயற்சி. ஏனெனில், எங்களைப் பற்றிப் புரியவைக்க எங்களுக்கு போதுமான மொழி இல்லை” என்கிறார் அரோரா.
உதாரணமாக, 2015-ல் காலமான அரோராவின் தாயார் அதை ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. “நான் அவரிடம் பலமுறை விளக்கினாலும், எங்களை நண்பர்கள் என்றுதான் என் அம்மா நினைத்தார். ‘நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்று அவள் சொல்லும் நேரங்கள் இருந்தன. எங்கள் உறவை விளக்க எந்த சொற்களஞ்சியமும் இல்லை” என்கிறார் அரோரா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"