1955ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்டத்தின் பிரிவின் கீழ், ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்க வேண்டி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வில், "ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிப்பது, தற்போதைய சட்ட விதி நடைமுறைகளுக்கு எதிராக அமையும்" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
நமது சட்டம், சமூக அமைப்பு மற்றும் மாண்புகள் ஒரே பாலின உறவு திருமணங்களை அங்கீகரிக்க வில்லை என்றும், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட திருமண உறவு என்று பொருள் கொள்ளப்படாமல் இருக்க, தம்பதியினர் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
'ஓரினச்சேர்க்கை குற்றமாகாது' என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை சுட்டிக் காட்டிய துஷார் மேத்தா, "அதற்கு மேல் தீர்பில் எதுவும் இல்லை" என்றும் வாதாடினார்.
அபிஜித் ஐயர் மித்ரா மற்றும் பிற மனுதாரர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்," எந்தவொரு அறிவிப்பும் இல்லாத நிலையில், ஒரே பாலின திருமணங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன .
ஓரினச்சேர்க்கை உறவுகளுக்கு சட்டரீதியான தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்தது. திருமணங்களை அங்கீகரிக்க மறுப்பது சமத்துவம் மற்றும் வாழ்க்கைக்கான உரிமையை மீறும் செயலாகும் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கை அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil