puducherry | karaikkal | சனிப் பெயர்ச்சியை ஒட்டி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் நோக்கோடு மாவட்ட நிர்வாகத்துடன் தேவஸ்தான நிர்வாகம் இணைந்து முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், பேருந்து, மருத்துவ முகாம்கள் பாதுகாப்பிற்காக காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளது.
இதனை இன்று (நவ.27) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேரில் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலவச தரிசனம் இல்லாமல் 1000, 600, 300 என மூன்று பிரிவுகளில் தரிசனத்திற்கு வழி செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து முழுமையான தரிசனத்திற்கு வழி வகுக்கும் வகையில் எல்லா பகுதிகளிலும் தரிசனத்திற்கான வழி பொருந்திய பதாகைகள் அமைக்கப்பட உள்ளன.
சனி பெயர்ச்சி தினத்தன்று அன்னதானம் செய்பவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் மட்டுமே அன்னதானம் செய்ய வேண்டும்.
சனிப்பெயர்ச்சியில் இருந்து 48 நாள்களுக்கு சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது” என்றார். இந்த ஆலயத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“