சஞ்சய் அரோராவுக்கு 2004 ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கம், 2014 ஆம் ஆண்டு சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம், காவல்துறை சிறப்புப் பணிக்கான பதக்கம், அன்ட்ரிக் சுரக்ஷா பதக் மற்றும் ஐநாவின் அமைதியை நிலைநாட்டும் பணிக்காக பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
டெல்லி காவல்துறையின் புதிய காவல் ஆணையராக 1988 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் அரோராவை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை நியமித்தது. இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ITBP) தற்போதைய இயக்குநர் ஜெனரலான அரோரா, டெல்லி காவல் ஆணையராக ஆகஸ்ட் 1ஆம் தேதி திங்கள்கிழமை பொறுப்பேற்கிறார்.
1984-ம் ஆண்டு குஜராத் மாநில கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானாவிடம் இருந்து டெல்லி போலீஸ் கமிஷனராக சஞ்சய் அரோரா பொறுப்பேற்பார்.
“உள்துறை அமைச்சகத்தின் காவல் பிரிவு, ஜூலை 31, 2022 தேதியிட்ட அறிவிப்பில், சஞ்சய் அரோராவை தமிழ்நாடு கேடரில் இருந்து அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் (AGMUT) கேடருக்கு மாறி பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அதிகாரியின் ஒப்புதலைத் தெரிவித்தது. இந்த ஒப்புதலைப் பின்பற்றி, ஆகஸ்ட் 1, 2022 முதல் அல்லது பொறுப்பேற்கும் தேதியிலிருந்து அடுத்த உத்தரவு வரும் வரை சஞ்சய் அரோரா டெல்லியின் காவல்துறை ஆணையராக நியமிக்கப்படுகிறார். இது தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் நடக்கிறது” என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குனர் பி.ஜி. கிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் அரோரா கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி இந்தோ திபேத் எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநராக பொறுப்பேற்றார். அதற்கு முன், அவர் சி.ஆர்.பி.எஃப்-இன் சிறப்பு தலைமை இயக்குநராக இருந்தார். மேலும், 1997 முதல் 2002 வரை இந்தோ-திபேத் எல்லைப் பாதுகாப்பு படையின் தளபதியாக பணியாற்றினார். சஞ்சய் அரோரா 1997 முதல் 2000 வரை உத்தரகாண்டில் உள்ள மாட்லியில் இந்தோ-திபேத் எல்லைப் பாதுகாப்பு பட்டாலியனுக்கு தலைமை தாங்கினார்.
ஒரு பயிற்றுவிப்பாளராக, அவர் 2000 முதல் 2002 வரை உத்தரகண்ட் முசோரியில் உள்ள இந்தோ-திபேத் எல்லைப் பாதுகாப்பு அகாடமியில் தளபதியாக (பயிற்சி) பணியாற்றினார்.
ஜெய்ப்பூரில் உள்ள மால்வியா என்.ஐ.டி-யில் சஞ்சய் அரோரா எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஐ.பி.எஸ் பணியில் சேர்ந்த பிறகு தமிழக காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். வனக் கொள்ளைக்காரன் வீரப்பனுக்கு எதிராகச் செயல்பட்டதற்காக வீரம் தீரச் செயலுக்கான முதலமைச்சரின் வீரப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டபோது, சிறப்பு அதிரடிப் படையின் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தார்.
சஞ்சய் அரோரா தேசிய பாதுகாப்பு குழுவில் (NSG) பயிற்சி பெற்ற பிறகு, 1991-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்ட காலத்தில், தமிழக முதலமைச்சருக்குப் பாதுகாப்பு அளிக்க சிறப்புப் பாதுகாப்புக் குழுவை அமைத்தவர்களில் இவரும் ஒருவர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார்.
2002 முதல் 2004 வரை கோவை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றினார். விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளராகவும், லஞ்ச ஒழிப்புத் துறையின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
சஞ்சய் அரோரா சென்னை மாநகர காவல்துறையின் கூடுதல் ஆணையராகவும் (குற்றம் மற்றும் தலைமையகம்) மற்றும் போகுவரத்து கூடுதல் ஆணையராகவும் இருந்து வழிநடத்தினார். பதவி உயர்வு பெற்ற பிறகு தமிழக காவல்துறையில் ஆப்பரேஷன்ஸ் ஏ.டி.ஜி.பி-யாகவும் காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏ.டி.ஜி.பி-யாகவும் நியமிக்கப்பட்டார்.
அவர் பிறகு, எல்லைப் பாதுகாப்பு படையில் சிறப்பு ஆப்பரேஷன்ஸ் ஐ.ஜி-யாகவும் சத்தீஸ்கர் பிரிவு சி.ஆர்.பி. எஃப் ஐ.ஜி-யாகவும் மற்றும் சி.ஆர்.பி.எஃப் சிறப்பு ஆப்பரேஷன்ஸ் ஐ.ஜி-யாகவும் பணியாற்றினார். சஞ்சய் அரோரா இந்தோ-திபேத் எல்லை பாதுகாப்பில் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு சி.ஆர்.பி.எஃப் ஆப்பரேஷன்ஸ் மற்ரும் தலைமை அலுவலக கூடுதல் தலைமை இயக்குநராகவும் ஜம்மு காஷ்மீர் மண்டலத்தில் சி.ஆர்.பி.எஃப் சிறப்பு தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
சஞ்சய் அரோரா 2004 ஆம் ஆண்டில் சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கம், 2014 ஆம் ஆண்டில் சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம், காவல்துறையில் சிறப்பு சேவைக்கான பதக்கம், அந்த்ரிக் சுரக்ஷா பதக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி நிலைநாட்டுவதற்கான பதக்கம் போன்ற பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”