உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் நடைபெறும் வருமான வரி சோதனையால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலா அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர், தமிழ் பத்திரிகைகளில் வருமானவரி சோதனை பற்றிய செய்திகளை வரி, வரியாக வாசித்து படிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 9-ஆம் தேதி முதல் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் என ஒருவர் பாக்கி இல்லாமல், வீடுகள், அலுவலகங்கள், தண்ணீர் டேங்க்குகள் என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஜெயா டிவி அலுவலகத்திற்குள் நுழைந்த அதிகாரிகள் தொடர்ந்து ஐந்து நாட்களாக அங்கு தீவிர சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல், கோவை, கோடநாடு மற்றும் பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட 187 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தனது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனையால் அதிர்ச்சி அடைந்து உள்ளார். வருமான வரி சோதனை பற்றிய விவரங்களை அவர் சிறையில் இருந்தே உன்னிப்பாக கவனித்து வருகிறாராம்.
வழக்கமாக சிறையில் உள்ள தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள் மற்றும் பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் கேட்டு சிறை வாசத்தை சசிகலா கழிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், வருமான வரி சோதனை தொடங்கிய நாளில் இருந்து இதுவரை அவர் சிறை தொலைக்காட்சிகளில் தமிழ் செய்தி சேனல்களை பார்த்து வருமான வரி சோதனைகளின் நிலவரங்களை அறிந்து வருகிறாராம். கடந்த 3 நாட்களாக நள்ளிரவு 1 மணி வரை சசிகலா தமிழ் செய்தி சேனல்களில் வரும் வருமானவரி சோதனை பற்றிய செய்திகளை சோகமாக பார்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், அவர் தமிழ் பத்திரிகைகளையும் தொடர்ச்சியாக படித்து வருகிறார் என கூறப்படுகிறது. தினமும் சிறை நூலகத்துக்கு செல்லும் அவர் அங்குள்ள தமிழ் செய்தித்தாள்களில் இருக்கும் வருமானவரி சோதனை தொடர்பான செய்திகளை வரி, வரியாக படித்து வருகிறாராம்.
ஐந்து நாட்களாக நடைபெற்ற இந்த ரெய்டு முழுவதுமே விவேக், கிருஷ்ணப்ரியாவை சுற்றி பின்னப்பட்ட வலை தான் என்று கூறப்படுகிறது. 9ம் தேதி காலையில் தொடங்கிய விசாரணையின் முடிவில் நேற்று அதிகாரிகள் விவேக் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். விவேக் வீட்டில் இருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதோடு அவரையும் விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சசிகலா குடும்பத்தின் இளம் தலைமுறையான விவேக், எதற்கும் அஞ்சாமல் அரசியல் ஈடுபாட்டோடு வலம் வருவதாகவும், அவரின் இந்த துணிச்சலை அசைத்து பார்ப்பதற்காகவே அவரை குறி வைத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து நாட்களாக விவேக்கை மூச்சு கூட விட அனுமதிக்காமல் ஐடி வைத்திருந்த செய்தியை மிகவும் கவலை படிந்த முகத்தோடு படித்து தெரிந்து கொண்டாராம் சசிகலா.
இந்த நிலையில், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் 6 ஆம் நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.