அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. சர்வதேச அளவில் கச்சாப் பொருட்களின் விலை அதிகரிப்பதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.
மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி, டீலர் கமிசன்கள் என அனைத்தும் சேரும் போது பொதுமக்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோலின் விலை, உற்பத்தி விலையில் இருந்து பல மடங்கு அதிகமாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்களின் அன்றாட தேவைகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை
இது தொடர்பாக நேற்று முக்கியமான ஆலோசனை ஒன்றை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. அதில் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், மற்றும் நிபுணர்கள் பங்கேற்றார்கள். அதில் பங்கேற்று பேசிய நரேந்திர மோடி “தொடர்ந்து அதிகரித்து வரும் பண வீக்கத்தினால் எண்ணெய் உற்பத்தி மற்றும் எண்ணெய் இறக்குமதிக்கு அதிக அளவு பண முதலீடு செய்துவருகிறது இந்தியா.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மேலும் கச்சாப் பொருட்களின் சந்தையில், எண்ணெய் விலையை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளே தீர்மானம் செய்கின்றன. உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே ஒரு கூட்டணி என்பது அனைத்து சந்தைகளிலும் இருந்து வருகிறது. அதே போன்ற ஒரு கூட்டணி எண்ணெய் உற்பத்தியிலும் நுகர்வோர் மற்றும் உற்பத்தி நாடுகளுக்கும் இடையே நிலவினால் இது போன்ற விலை உயர்வினை கட்டுப்படுத்த இயலும் என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அதிகரித்து வரும் எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியா தன்னுடைய 85% எண்ணெய் தேவையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவருகிறது. கடந்த சில மாதங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் பெரிய அளவிலான பொருளாதார சிக்கல்களை இந்தியா அடைந்துள்ளது.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பொருட்களுக்கான பணம் செலுத்தும் முறையை மாற்றி அமைத்தால், விலைவாசி உயர்வுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், பணம் செலுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதன்மூலம், அந்தந்த நாடுகளின் நாணயத்துக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் பேசியிருக்கிறார்.
அமெரிக்காவின் பொருளாதார தடையின் பிடியில் ஈரான்
நவம்பர் மாதத்தில் இருந்து ஈரான் நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்திருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பற்றி விவாதிக்க 3வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நேற்று பிரதமர் நடத்தினார். அதில் சவுதி அரேபியா பெட்ரோலியத் துறை அமைச்சர் காலித் அல் பாலி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர்கள் கலந்து கொண்டனர். அந்த உயர்மட்டக் கூட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏற்பட்ட சர்வதேச வர்த்தக வளர்ச்சியின் பாதிப்பினைப் பற்றி எடுத்துரைத்தார் நரேந்திர மோடி.
எண்ணெய் நிறுவனங்கள் ஏன் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு உரிய அளவில் முதலீடு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். நடத்தப்பட்ட ஆலோசனை முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் போடப்படும் முதலீட்டினை அதிகரிப்பது மற்றும் உற்பத்தி மற்றும் நுகர்வு நாட்டினர் எப்படி எண்ணெய் பொருட்களின் விலையை சீராக வைப்பது என்பது தொடர்பாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடியின் அறிக்கை
ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் மோடி. அதில் எண்ணெய் பொருட்களின் விலை மற்றும் உற்பத்தியினை அந்த நாடே தீர்மானம் செய்கிறது. போதுமான அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டாலும் கூட அந்த நாடுகள் சில முக்கியமான மற்றும் தனித்துவமான கொள்கைகளை கடைபிடிக்கிறது. இதன் விளைவாகவும் எண்ணெய்ப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. எண்ணெய் பொருட்களின் விலையை குறைப்பது பற்றி உற்பத்தி நாடுகள் தீர்மானம் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் மோடி.
இந்தியன் எனெர்ஜி போரம்மில் பேசிய சவுதி அரேபியா நாட்டின் பெட்ரோலியத் துறை அமைச்சர் காலித் அல் ஃபலிஹ் “நுகர்வு நாடுகளின் வலி என்ன என்பதை பிரதமர் நரேந்திர மோடி மிகவும் சத்தமாக வருத்தத்துடன் தெரிவித்தார். உலகின் அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியா நிச்சயம் இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காணும். நரேந்திர மோடி பொன்முட்டையிடும் வாத்துகளை விலைவாசி உயர்வால் கொன்றுவிடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்” என குறிப்பிட்டு பேசியிருக்கிறார் அல் ஃபலிஹ்.
இந்தியா சார்பில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். அதே போல் தொழில் அதிபர்கள் அனில் அகர்வால், முகேஷ் அம்பானி ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.