Advertisment

பணமாக்கப்பட்ட 22,030 தேர்தல் பத்திரம்: சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த எஸ்.பி.ஐ

ஏப்ரல் 14, 2019 - பிப்ரவரி 15, 2024-க்கு இடையில் மொத்தமாக 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட நிலையில், அவற்றில் 22,030 தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
SBI affidavit in Supreme Court 22217 electoral bonds purchased 22030 redeemed from 2019 to 2024 Tamil News

தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இணக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் எஸ்.பி.ஐ தலைவர் தினேஷ் குமார் காரா.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Supreme Court | Electoral Bonds | Sbi Bank: பா.ஜ.க.வின் மறைந்த அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது, ​​2017-18 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் உரையில் தேர்தல் பத்திரம் திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டது. இதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரையிலான தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு வந்தன.

Advertisment

இந்த தேர்தல் பத்திரங்களை தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதியை வழங்கி வந்தன. இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெருமளவு நன்கொடையை பெற்றன. 

தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த திட்டம் அரசியல் அமைப்பிற்கு எதிரான என அறிவித்த உச்சநீதிமன்றம், இந்த திட்டத்தை கடந்த மாதம் 15ம் தேதி ரத்து செய்தது. மேலும், 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் தற்போதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? அரசியல் கட்சிகளுக்கு யார்? யார்? நிதி கொடுத்துள்ளனர் என்ற விவரத்தை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க ஜுன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் தரும்படி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி மனு தாக்கல் செய்தது. இந்த மனு விசாரித்த உச்சநீதிமன்றம், கால அவகாசம் கோரி எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை நேற்று (மார்ச் 12) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு எஸ்.பி.ஐ. வங்கிக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

எஸ்.பி.ஐ. வங்கி சமர்ப்பிக்கும் தகவல்களை தொகுத்து 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், இந்த உத்தரவை நிறைவேற்ற தவறினால் எஸ்.பி.ஐ. வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி நேற்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. 

பிரமாண பத்திரம் தாக்கல் 

இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ) தலைவர் தினேஷ் குமார் காரா, தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இணக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஏப்ரல் 14, 2019 மற்றும் பிப்ரவரி 15, 2024-க்கு இடையில் பத்திரங்களை வாங்குதல் மற்றும் திரும்பப் பெறுதல் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த விவரங்களில் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய தேதி, வாங்கியவர்களின் பெயர்கள், அவர்களின் பெயர்கள், தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிய தேதி மற்றும் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் பெயர்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மொத்தமாக 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் 22,030 தேர்தல் பத்திரங்கள் ஏப்ரல் 1, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை பணமாக்கப்பட்டுள்ளன. அதேசமயம், ஏப்ரல் 1, 2019 முதல் ஏப்ரல் 11, 2019 வரை, மொத்தம் 3,346 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டு, அவற்றில் 1,609 பணமாக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கியது இங்கு நினைவுகூரத்தக்கது. 

மேலும், ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை, மொத்தம் 18,871 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டு, 20,421 பணமாக்கப்பட்டுள்ளன.  

நேற்று செவ்வாய்க்கிழமை எஸ்.பி.ஐ  தேர்தல் பத்திரங்களின் விவரங்களை டிஜிட்டல் வடிவில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு தெரிவித்தது போல, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புதன்கிழமை இரவு ஜம்மு-காஷ்மீரில் இருந்து திரும்பிய பிறகு ஆணையத்தின் அதிகாரிகள் தரவை மதிப்பாய்வு செய்வார்கள். எஸ்.பி.ஐ வழங்கிய விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15 ஆம் தேதிக்குள் தனது இணையதளத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘22,217 electoral bonds purchased, 22,030 redeemed by parties between April 1, 2019 and February 15, 2024’: SBI’s affidavit in Supreme Court

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Supreme Court Sbi Bank Electoral Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment