இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் நாகேந்திர ராமச்சந்திர நாயக்கை நியமிக்கும் முடிவை மூன்றாவது முறையாக செவ்வாய்க்கிழமை மீண்டும் வலியுறுத்தியது. மேலும், ஐந்து உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளாக நியமிக்க எட்டு பெயர்களையும் பரிந்துரைத்தது.
“சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் 10 ஜனவரி 2023 அன்று கூடிய அதன் கூட்டத்தில், மறுபரிசீலனையின் பேரில், வழக்கறிஞரான நாகேந்திர ராமச்சந்திர நாயக்கை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்துவதற்கான முந்தைய பரிந்துரையை மீண்டும் வலியுறுத்த முடிவு செய்துள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6A; முதலில் அரசியலமைப்பு செல்லுபடியை முடிவு செய்வோம் – உச்ச நீதிமன்றம்
நாகேந்திர ராமச்சந்திர நாயக்கின் பரிந்துரையுடன், கொலீஜியம் பரிந்துரைத்த 19 பெயர்களை கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. வழக்கமாக, கொலீஜியம் தனது பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தினால், அதை ஏற்க அரசு கடமைப்பட்டுள்ளது.
நாகேந்திர ராமச்சந்திர நாயக்கை முதன்முதலில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் அக்டோபர் 3, 2019 அன்று பரிந்துரைத்தது. கொலீஜியம் தனது முடிவை மார்ச் 2, 2021 மற்றும் செப்டம்பர் 1, 2021 ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
செவ்வாயன்று, கொலீஜியம் நீதித்துறை அதிகாரிகளான அரிபம் குணேஷ்வர் சர்மா மற்றும் கோல்மேய் கைபுல்ஷில்லு கபுய் ஆகியோரையும் மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்துள்ளது.
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு, நீதிபதிகளாக நியமனம் செய்ய நீதித்துறை அதிகாரிகளான பி.வெங்கட ஜோதிர்மாய் மற்றும் வி.கோபாலகிருஷ்ண ராவ் ஆகியோரை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கவுகாத்தி உயர் நீதிமன்றத்திற்கு, நீதித்துறை அதிகாரி மிருதுல் குமார் கலிதாவை பரிந்துரைத்துள்ளது.
பாம்பே உயர் நீதிமன்றத்திற்கு, வழக்கறிஞர் நீலா கேதார் கோக்லேவை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. நீதித்துறை அதிகாரிகள் ராமச்சந்திர தத்தாத்ரே ஹுதார் மற்றும் வெங்கடேஷ் நாயக் தவர்நாயக்கா ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.