வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிவலிங்கத்தின் வயதைக் கண்டறிய கார்பன் டேட்டிங் உள்ளிட்ட அறிவியல் ஆய்வுக்கு அனுமதி அளித்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 19) ஒத்திவைத்தது.
ஞானவாபி மசூதி நிர்வாகக் குழு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹுசெபா அஹ்மதியின் சமர்ப்பிப்புகளைக் கவனத்தில் கொண்டு தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், நீதிபதிகள் பி எஸ் நரசிம்ஹா மற்றும் ஜே பி பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மசூதி குழு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, உத்தரப் பிரதேச அரசு மற்றும் இந்து மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், “உத்தரவின் தாக்கங்கள் நெருக்கமான ஆய்வுக்கு தகுதியானவை என்பதால், உத்தரவில் சம்பந்தப்பட்ட வழிமுறைகளை செயல்படுத்துவது அடுத்த தேதி வரை ஒத்திவைக்கப்படும்" என்று பெஞ்ச் கூறியது.
இதையடுத்து, சிவலிங்கத்தின் அறிவியல் ஆய்வை தற்போதைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசும் உத்தரபிரதேச அரசும் ஒப்புக்கொண்டன.
முன்னதாக, கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தியது.
தொடர்ந்து, கணக்கெடுப்பின் போது வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் "சிவ்லிங்கம்" கார்பன் டேட்டிங் உள்ளிட்ட "விஞ்ஞான ஆய்வுக்கு" மே 12 அன்று உத்தரவிட்டது.
கணக்கெடுப்பின் போது, கடந்த ஆண்டு மே 16 அன்று மசூதி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள் இந்து தரப்பால் "சிவ்லிங்கம்" என்றும், முஸ்லிம்கள் தரப்பில் "நீரூற்று" என்றும் கூறப்பட்டது.
அக்டோபர் 14, 2022 அன்று "சிவ்லிங்கத்தின்" அறிவியல் ஆய்வு மற்றும் கார்பன் டேட்டிங் செய்வதற்கான விண்ணப்பத்தை வாரணாசி மாவட்ட நீதிபதி நிராகரித்த பிறகு, மனுதாரர்களான லக்ஷ்மி தேவி மற்றும் மூன்று பேர் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“