கர்நாடாகவில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை உத்தரவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கர்நாடாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணை, தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ். தீட்சித் மற்றும் காஜி செய்புன்னேசா மொகியுதீன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை நடத்தியது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசின் ஹிஜாப் தடை செல்லும் என தீர்ப்பளித்து, தடையை நீக்கக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்வுகள் தொடங்கவிருப்பதால் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், ஹிஜாப் வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய வழக்கறிஞரின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் இன்று நிகாரித்தது. வழக்கறிஞரிடம், இந்த விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம் என நீதிபதி கேட்டுக்கொண்டார். அந்த மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என்பதை உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தேர்வுக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பில்லை. இதை பரபரப்பாக்க வேண்டாம் என்றார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத், மார்ச் 28 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கவிருப்பதால் நிர்வாகம் மாணவிகளை அனுமதிக்கவில்லை எனில் ஓராண்டு முழுவதும் மாணவிகள் இழக்க நேரிடம். எனவே, நீதிபதி இவ்வழக்கை விசாரித்த அடுத்த வாரத்தில் நாள் ஒதுக்க வேண்டும் என்றார்.
ஆனால், நீதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டு, அடுத்த வழக்கு விசாரணையை தொடருமாறு நீதிமன்ற ஊழியர்களை கேட்டுக் கொண்டார்.
முன்னதாகவும், இதே விவகாரத்தை முன்கூட்டியே விசாரிக்க கோரிக்கையிட்ட போதும், உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil