கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது முல்லைப் பெரியாறு அணை. கேரள மாநில எல்லையில் இருந்தாலும், அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த அணை விவகாரத்தில், தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சினை நீடித்து வருகிறது. முல்லை பெரியாறு அணை பழமையானது என்பதால், பாதுகாப்பு கருதி 142 அடி வரை நீரை தேக்கிவைக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சமீப நாள்களாக கேரளாவில் கடும் மழை பெய்துவருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக அணையை ஒட்டி உள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் மக்களுக்கு ஆபத்து இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை இன்று நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.கிருஷ்ணமூா்த்தி வாதாடுகையில், 'முல்லைப் பெரியாறு அணையில் திங்கள்கிழமை காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 137.2 அடிதான் உள்ளது. இதனால், அணையின் நீரை 139 அடியாக பராமரிக்க உத்தரவிட வேண்டிய அவசியம் வரவில்லை.
மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 2006, 2014-ஆம் ஆண்டுகளில் பிறப்பித்த உத்தரவின்படி அணையில் 142 அடி வரை தேக்கி வைப்பதற்குத் தமிழக அரசுக்கு உரிமை உள்ளது' என்றார்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், இந்த விவகாரத்தில் மேற்பார்வை குழுதான் முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக ஓரிரு நாள்களில் உடனடியாக முடிவு செய்யப்பட வேண்டும்' என்றனர்.
அப்போது கேரள அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா, "இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணை நடைபெறும் வரை அணையின் நீர்மட்டத்தை 137 அடியாக தேக்கி வைக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
அதற்குப் பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞா், 'அணைக்கு வரும் நீர் வரத்தை விட அதிகளவில் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வரும் நாள்களில், இடுக்கியில் மழை பொழிவு குறைவாக தான் காணப்படும் என வானிலை அறிக்கை கூறுகிறது" என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் (கேரள-தமிழக அரசுகள்) அவசர அடிப்படையில் கூடி கலந்தாலோசிக்க வேண்டும். அணையின் அதிகபட்ச நீர்மட்டத்தைப் பராமரிப்பது தொடர்பாக மேற்பார்வைக் குழு உறுதியான முடிவை எடுக்க வேண்டும்.
இது ஒரு முக்கியமான மக்களின் வாழ்க்கை சார்ந்த விவகாரம். இது நீண்ட விவாதம் நடத்துவதற்கான அரசியல் களம் அல்ல. மக்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. இதில் ஒரு தரப்போ அல்லது மற்ற தரப்போ செயல்படாவிட்டால் நீதிமன்றம் தலையிட வேண்டியது வரும் எனக் கூறி வழக்கு விசாரணையை நாளை (அக்டோபா் 27) ஒத்திவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil