செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் ஆல்ட் நியூஸ் (Alt-News) இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது சுபைர் கடந்த ஜூன் 27ஆம் தேதி டெல்லி போஸீசாரால் கைது செய்யப்பட்டார். 2018ஆம் ஆண்டு சுபைர்ட்விட்டரில் பதிவிட்ட கருத்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுபைருக்கு எதிராக டெல்லி, உத்தரப் பிரதேச மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் அவர் மீது பல்வேறு மாவட்ட காவல்நிலையங்களில் 7 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து, டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுபைருக்கு ஜாமீன் கிடைத்தது. இருப்பினும் உத்தரப் பிரதேசத்தில் பதிவான வழக்குகளில் தனித் தனி நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற வேண்டியிருந்ததால் சிறையில் இருந்தார். இந்தநிலையில், அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கோரி சுபைர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (ஜூலை 20) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், 2018 ட்விட் தொடர்பாக சுபைர் மீது உத்தரப் பிரதேசத்தில் பதிவான அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் பதிவான வழக்குகள் டெல்லி போஸீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரப் பிரதேச போஸீசாரால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவையும் கலைத்து உத்தரவிட்டது. இந்த ட்விட் தொடர்பாக சுபைர் மீது மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் அதுவும் டெல்லி போஸீசாருக்கு மாற்றப்பட்டு சேர்த்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த உத்தரவையடுத்து, சுபைர் திகார் சிறையில் இருந்து நேற்று வெளி வந்தார். முன்னதாக, சுபைருக்கு ஜாமீன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கரிமா பிரசாத், வரும் நாட்களில் சுபைர் ட்விட்டர் பதிவிடக் கூடாது என நிபந்தனை விதிக்குமாறு கேட்டார். மேலும், ஆதாரங்களை அழிக்க கூடாது என உறுதிமொழி கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஆதாரங்கள் அனைத்தும் பொது வெளியில் உள்ளன எனக் கூறி நிபந்தனைகள் விதிக்க மறுத்தனர். மேலும், " சுபைர் சட்டத்தை மீறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் ஒரு பத்திரிகையாளரை எப்படி எழுதக் கூடாது என்று சொல்ல முடியும்? வழக்கறிஞரை வாதாடக் கூடாது என்று சொல்வது போல் இருக்கிறது" என்று கூறினர்.