ஆறு மாதங்களுக்கு முன்பே, 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு,மத்திய அரசு “Azadi Ka Amrit Mahotsav” என்ற பெயரில் நிகழ்ச்சியைத் தொடங்கியது. இதற்கான விளம்பரங்கள் மோடியின் புகைப்படத்துடன் பல்வேறு இடங்களில் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது உச்ச நீதிமன்ற பதிவேட்டிலிருந்து வழக்கறிஞர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் கடித்ததில் அந்த நிகழ்ச்சியின் விளம்பரம் மோடியின் புகைப்படத்துடன் இடம்பெற்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல வழக்கறிஞர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த கூற்றுப்படி, “நீதித்துறை மற்றும் நிர்வாகத்தைப் பிரிக்கும் பகுதியாக மோடி புகைப்படம் அடங்கிய விளம்பரம் இடம்பெற்றதாக” தெரிவித்தனர்.
நேற்று உச்ச நீதிமன்ற ரெஜிஸ்ரி வெளியிட்ட அறிக்கையில், ” உச்ச நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் தேசிய தகவல் மையத்துக்கு(என்ஐசி), உச்ச நீதிமன்றத்திற்குத் தொடர்புடைய மெயிலில் இடம்பெற்றுள்ள மோடி புகைப்படத்துடன் அடங்கிய விளம்பரத்தை நீக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்றத்தின் புகைப்படத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக அதனை மாற்றுவதாக என்ஐசி தெரிவித்ததாக” குறிப்பிட்டிருந்தனர்.
இந்த அறிக்கையானது, உச்சநீதிமன்ற வக்கீல்களின் ஆன்-ரெக்கார்ட் அசோசியேஷன் வாட்ஸ்அப் குழுவில் பல வழக்கறிஞர்கள் இவ்விவகாரத்திற்கு ரெட் காரட் காட்டியதையடுத்து சில மணி நேரங்களில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த மெசேஜில், “சார், பிரதமர் புகைப்படம் அடங்கிய மெயிலை ரெஜிட்டிரியிடமிருந்து பெற்றேன். ஆனால், உச்ச நீதிமன்றம் தன்னிச்சையான ஒன்று, அரசுக்குச் சொந்தம் கிடையாது. இந்த விளம்பரம் இதற்கு எதிரானதாக உள்ளது. இது சரி என நீங்களும் நினைத்தால், தலைமை நீதிபதியுடம் எதிர்ப்புடன் எடுத்துரையுங்கள்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.