உத்தரபிரதேச மாநில பாஜக எம்.பி. ஒருவர், சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை மிரட்டும் ஆடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரும், ஆக்ரா தொகுதியின் எம்பியுமான ராம் சங்கர் கத்தேரியாதான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளவர்.
அந்த ஆடியோவில், போடலா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் பால் யாதவை, சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்க அனுமதிக்காதது குறித்து ஒருவர் மிரட்டுகிறார். அதற்கு, மகேஷ் பால் விதிமுறைகளின்படியே அங்கு கடைகள் அமைக்க தான் அனுமதிக்கவில்லை என விளக்குகிறார்.
அதன்பின் ராம்சங்கர் கத்தேரியா, சப் இன்ஸ்பெக்டரை மிரட்டுவதுபோன்று அந்த ஆடியோவில் உள்ளது. அதில், ராம் சங்கர் கத்தேரியா, ”நீ யாதவாக இருக்கலாம். ஆனால், குண்டர் இல்லை. நீ யோகிக்கே சவால் விடுகிறாயா? இப்படியே செய்தாயென்றால், உன்னை பதவி நீக்கம் செய்து ஜெயிலுக்கு அனுப்புவோம்”, என கூறுகிறார்.
மேலும், ”தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை நீ தாக்கியிருக்கிறாய். அவரிடமிருந்து புகாரை பெற்று தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் சமர்ப்பித்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வோம். உன்னை ஜெயிலுக்கு அனுப்புவோம். உன்னால் பாதிக்கப்பட்டவர் அழுகிறார். நீ ஜெயிலுக்கு சென்றால் உனக்கு பெயில் கூட கிடைக்காது. பதவி உயர்வும் கிடைக்காது”, என கூறுகிறார்.
இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் பால், தான் யாரையும் தாக்கவில்லை எனவும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக தான் செயல்படவில்லை எனவும் கூறுகிறார்.
இந்த ஆடியோ குறித்து விசாரணை நடைபெறும் என காவல் துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.