மாசுபாடு தொடர்பாக டெல்லி, பஞ்சாப் மற்றும் மத்திய அரசுகள் மீது கடுமையான கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், இது டெல்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய கேள்வி என்றும் அதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியது.
“மாசுபாடு காரணமாக மக்களை இப்படி இறக்க அனுமதிக்கலாமா? 100 ஆண்டுகள் நாடு பின்னோக்கிச் செல்ல அனுமதிக்கலாமா”என்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
இன்று முதல் ஏழு நாட்களுக்குள், சிறு, குறு விவசாயிகளுக்கு அறுவடைக்குப்பின் பயிர் தாள்களை கையாள குவிண்டாலுக்கு ரூ.100 ஆதரவுத் தொகையையும் அவர்களுக்கு தேவையான இயந்திரங்களையும் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு உத்தரவிட்டது. “விவசாயம் என்பது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். விவசாயிகளின் நலனைக் கவனிப்பது மாநிலத்தின் கடமையாகும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று மாதங்களுக்குள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கவனிக்க ஒரு விரிவான திட்டத்தை தயாரிக்க மூன்று மாநிலங்களையும் வலியுறுத்தியது.
குளிர்காலத்தில் அண்டை மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதாக பெருமளவில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அறுவடைக்குப்பின் தாள்களை எரிப்பதை தடுப்பதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காததற்காக நீதிபதி அருண் மிஸ்ரா பஞ்சாப் தலைமைச் செயலாளரை கடிந்து கொண்டார்.
“அரசாங்கம் ஏன் விவசாயிகள் அறுவடைக்குப் பின் தாள்களை எரிப்பதை நிறுத்த முடியாது? அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து தாள்களை சேகரித்து ஏன் வாங்க முடியாது? இதற்கு விவசாயிகளைத் தண்டிப்பது தீர்வு அல்ல… இதற்கு உங்களிடம் ஒரு கொள்கை கூட இல்லை… நீங்கள் தந்தக் கோபுரத்திலிருந்து ஆட்சி செய்து மக்களை இறக்க விட்டுவிட விரும்புகிறீர்கள் ” என்று நீதிபதி அருண் மிஸ்ரா கூறினார்.
இருப்பினும், விவசாயிகளிடமிருந்து தாள்களை வாங்குவதற்கான கொள்கை மாநிலத்தில் இல்லை என்பதை பஞ்சாப் தலைமைச் செயலாளர் ஒப்புக் கொண்டார். “நாங்கள் உங்களை இங்கிருந்து இடைநீக்கம் செய்வோம்... பிரச்சினையே எல்லோரும் மக்கள் நல அரசு என்ற கருத்தை மறந்துவிட்டனர்” என்று நீதிபதி மிஸ்ரா கூறினார்.
அரசாங்கங்கள் மக்களைப் பற்றி கவலைப்படாவிட்டால் அவர்களுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியது. “நாட்டின் ஜனநாயக அரசிடமிருந்து அதிகா தாள்களை எரிப்பதையும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று இந்த அமர்வு கூறியது.
தேசிய தலைநகரில் (என்.சி.ஆர்) அனைத்து கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் குப்பைகளை எரிப்பதை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தடை செய்தது. உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறியது.
மேலும், “விமானங்கள் திருப்பி விடப்படுவதாகவும், குடிமக்கள் தங்கள் வீடுகளில் கூட பாதுகாப்பாக இல்லை என்பது நீங்கள் வெட்கப்பட வேண்டாமா? நாட்டின் தேசிய தலைநகரில் செப்பனிடப்படாத வழிகள் குண்டும் குழியுமாக உள்ளன என்பது அதிர்ச்சியூட்டும் விவகாரம்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
அறுவடைக்குப் பின் தாள்கள் எரியும் மண்டலங்களை பிராந்தியங்களாக பிரிக்கவும் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள விவசாயிகளின் தாள்களை எரிக்க அனுமதிக்கும் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் ஆலோசனையையும் நீதிபதி மிஸ்ரா நிராகரித்தார். மேலும், மத்திய அரசு தலைமை வழக்கறிஞர், இந்த பரிந்துரை அதிகாரிகளுடன் விவாதிக்கப்படவில்லை என்று ஒரு நடைமுறைகளை சமர்ப்பித்தார்.