ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக பீட்டா தொடர்ந்த வழக்கினை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக பீட்டா தொடர்ந்த வழக்கினை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்திடவேண்டி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மிருகவதை தடுப்புச் சட்டம், 1960-ல் சட்டத்திருத்தம் செய்து தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது. இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. ஆனால், இந்த மசோதாவை எதிர்த்து பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு உட்பட ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப்.நரிமன் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அப்போது, இதுதொடர்பாக, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில், மாநில அரசு சட்டம் இயற்ற முடியுமா எனவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப்.நரிமன் ஆகியோர் உத்தரவிட்டனர். இந்த வழக்குகளை விசாரிக்க உள்ள 5 நீதிபதிகளை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அறிவிக்கும்.

அந்த அமர்வு, மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில், மாநில அரசு சட்டம் இயற்ற முடியுமா, ஜல்லிக்கட்டு ஒட்டுமொத்த தமிழர்களின் கலாச்சாரமா என்பது குறித்து விசாரிக்கும்.

×Close
×Close