Advertisment

அயோத்தி தீர்ப்பு : மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்!

காலை 10.45மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது.

author-image
WebDesk
Mar 08, 2019 09:08 IST
அயோத்தி தீர்ப்பு : மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்!

அயோத்தி தீர்ப்பு : அயோத்தி வழக்கு விவகாரத்தில் மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகியது.அயோத்தி நிலப் பிரச்னையை நீதிமன்றம் நியமிக்கும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.

Advertisment

உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்தி. இங்குள்ள ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து, 14 மேல் முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. மார்ச் 5ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம், ‘ராம ஜென்மபூமி - பாபர் மசூதி விவகாரம் என்பது நிலத்தைப் பொறுத்தது அல்ல நம்பிக்கையைப் பொறுத்தது' என்று கருத்து தெரிவித்தது.

இந்த வழக்கின் ஒரு மனுதாரரான இந்து மகாசபா, ‘பொது மக்கள் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த விரும்பமாட்டார்கள்' என்றதற்கு நீதிமன்றம், ‘ஆரம்பிப்பதற்கு முன்னரே அது குறித்து ஒரு முன் முடிவு வேண்டாம்' என்று பதில் அளித்திருந்தது.பாபர் மசூதி 1992, டிசம்பர் 6-ம்தேதி இடிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே தற்போது பிரச்னை எழுந்திருக்கும் 2.7 ஏக்கர் நிலத்தில் வில்லங்கம் இருந்து வந்தது.

2010-ம் ஆண்டின்போது தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் பிரச்னைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான் என்றும் அதன் 3-ல் 2 பங்கு இடத்தை இந்துக்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

மீதமுள்ள இடம் சன்னி சென்ட்ரல் வக்ப் வாரியத்திற்கு சென்று விடும் என்றும் கூறியது. இருப்பினும் இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2011 செப்டம்பரில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மேல் முறையீடு செய்தன.

அக்டோபர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகிய உத்தர பிரதேச அரசு, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அவசர சட்டம் நிறைவேற்றி அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகளும், பாஜகவில் ஒரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியது. இதை நிர்மோகி அகாரா தவிர்த்த பிற இந்து அமைப்புகள் எதிர்க்கின்றன.

இந்நிலையில் மத்தியஸ்தர்கள்  நியமிப்பது தொடர்பான தீர்ப்பை  உச்சநீதிமன்றம் இன்று வெளியிடும் என்று தெரிவித்திருந்தது. அதன் படி, இன்று காலை சரியாக 10. 45 மணியளவில் தீர்ப்பு வெளியாகியது.

இந்த தீர்ப்பு குறித்து முழு தகவல்கள் ஆங்கிலத்தில்

இதில், அயோத்தி நிலப் பிரச்னையை நீதிமன்றம் நியமிக்கும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிற்பித்தது. ஒய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு அயோத்தியில் சமரசம் செய்யும் என்றும், மத்தியஸ்தர் குழு ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தையை தொடங்கி 8 வாரங்களில் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி  உத்தரவு பிற்பித்துள்ளார்.

மேலும், அயோத்தி சமரச பேச்சு வார்த்தை விவரங்களை ஊடகங்கள் வெளியிடவும் நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. மத்தியஸ்தர்கள் குழுவில் , ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்:

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நீண்டகாலமாகவே அயோத்தி வழக்கில் அதிகாரபூர்வமற்ற வகையில் மத்தியஸ்த பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுக் குறித்து பல தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தமிழகத்தின் கும்பகோணத்தை சேர்ந்தவர்.

இப்ராஹிம் கலிபுல்லா இப்ராஹிம் கலிபுல்லா

இப்ராஹிம் கலிபுல்லா:

மத்தியஸ்த குழுவின் தலைவரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான இப்ராஹிம் கலிபுல்லா தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

ஸ்ரீராம் பஞ்சு ஸ்ரீராம் பஞ்சு

ஸ்ரீராம் பஞ்சு:

வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு சென்னையைச் சேர்ந்தவர். பல வழக்குகளில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவிடும் வகையில் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட அனுபவம் கொண்டவர்.

#Supreme Court #Ayodhya Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment