உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் மத்திய இணையமைச்சரின் மகனுக்கு தொடர்பு இருந்ததால், அவரை கைது செய்ய கோரிக்கைகளை வலுத்தன.
Advertisment
உ.பி.யைச் சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்தனர். இப்பிரச்சினை விஷவரூபம் எடுத்ததால், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்வதாக நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று, இவ்வழக்கு தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. உ.பி., அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கரிமா பிரசாத்திடம் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது. உ.பி. அரசு இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்றும் கடுமையான மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகவும் தலைமை நீதிபதியிடம் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது பேசிய அரசு வழக்கறிஞர் பிரசாத், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆணையம் இரண்டு மாதங்களில் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, "வழக்கில் யார் யாரைக் கைது செய்துள்ளீர்கள்? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள்? வழக்கு விசாரணை எந்த நிலைமையில் உள்ளது? போன்ற தகவல்கள் அடங்கிய விரவான அறிக்கையை நாளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார். வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இறந்துபோன விவசாயிகளில் ஒருவரின் தாயார் மகனின் இழப்பு தகவலை கேட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், உடனடி மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, உடனடியாக அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களாக தடுப்புக் காவலில் இருந்த பிரியங்கா காந்தி, அவருடைய சகோதரர் ராகுல் காந்தியுடன் லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தாரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil