உத்தரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் தொகுதி பா.ஜ. எம்.எல்.ஏ, குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 9 பேர் மீதான பாலியல் புகார் தொடர்பான அனைத்து வழக்குகளும் டில்லிக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரேதச மாநிலத்தின் உன்னாவ் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோர் 2017ம் ஆண்டில், 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. குல்தீப் சிங், கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனிடையே, எம்எல்ஏ உள்ளிட்டோர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனிடையே, அந்த பெண்ணின் தந்தை மர்மமான முறையில் மரணமடைந்தார்.
தங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்ததல்கள் வருவதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர்கள் கடந்த மாதம் 17ம் தேதி கடிதம் எழுதியுள்ளனர். இதனிடையே, கடந்த 22ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண், தனது உறவினர்கள் மற்றும் வக்கீலுடன் காரில் ரே பரேலி பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி இவர்களது கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் உறவுக்கார பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். புகார் கொடுத்த பெண் மற்றும் வக்கீல் பலத்த காயங்களுடன் லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கார் விபத்து நாடாளுமன்றம் வரை எதிரொலித்த நிலையில், உச்சநீதிமன்றம் உடனடியாக களமிறங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் விசாரணையை முடுக்கிவிட்டார்.
தாமதம் ஏன் : 17ம் தேதி தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம், 30ம் தேதி தான் அவருக்கு சென்று சேர்ந்துள்ளது. தாமதத்திற்கு காரணம் என்ன என்று கேள்வி கேட்டுள்ள தலைமை நீதிபதி கோகோய், சாலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்டோர் இதற்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
டில்லிக்கு மாற்றம் : : உன்னாவ் பாலியல் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகள் உடனடியாக டில்லிக்கு மாற்றப்படுவதாக அறிவித்துள்ள தலைமை நீதிபதி கோகோய், லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலியல் புகார் அளித்த பெண் மற்றும் அவரது வக்கீலுக்கு டில்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தேவையான நஷ்டஈடை, உடனடியாக வழங்க உத்தரபிரதேச அரசிற்கு நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டுள்ளார்.