ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட சட்டப் பிரிவு 370 தற்காலிகமானது, அது நிரந்தரமானது அல்ல என்றும் வழக்கில் உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பையும் இன்று வழங்கியுள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது. மேலும் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தது.
இந்த நிலையில், 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (டிச.11) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கின. வழக்கில் 3 விதமான தீர்ப்புகள் வெளியாகி உள்ளன.
தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர். இவர்களிடமிருந்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக, இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக நீதிபதி சஞ்சிவ் கன்னா ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு தற்காலிகமானது. அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு நிரந்தரமானது அல்ல. 370வது சட்டப் பிரிவை நீக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு போர் சூழல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக ஏற்பாடு என்று கூறியுள்ளார். மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப் பிரிவை நீக்கியது செல்லும். காஷ்மீருக்கு தனி ஆட்சி உரிமை கிடையாது.
இந்தியாவுடன் இணைந்த பிறகு தனது முழுமையான இறையாண்மையை காஷ்மீர் இழந்து விடுகிறது. இந்திய அரசியலமைப்போடு இணைந்த துதான் காஷ்மீர் அரசியலமைப்பு. ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது என்று கூறினார்.
மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். விரைவில் வழங்கி செப்டம்பர் 30, 2024 ஆண்டுக்குள் ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்ற தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/explained/explained-law/article-370-verdict-supreme-court-explained-live-updates-9061383/
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.