மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இருவருக்கும் இடையில் நடக்கும் அதிகாரப் போர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கின்றார்” என்று குற்றம் சாட்டுகின்றார். ஆனால் மத்திய அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் தரப்பு “டெல்லி, இந்தியாவின் தலைநகர், அதனால் அதற்கு அதிக முக்கியத்துவம் தர மத்திய அரசு விரும்புகின்றது” என்று கூறுகின்றது.
யாருக்கு அதிகாரம் என்பதை முடிவு செய்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்க்கர், டி.ஒய். சந்திரசுட், மற்றும் அசோக் பூஷன் ஆகியோரைக் கொண்ட அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பினை வெளியிட உள்ளது.
12.00pm: முதல்வரும் ஆளுநரும் இணைந்து செயல்படாமல் போனால் டெல்லி நிறைய விளைவுகளை சந்திக்கும் என முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீக்சித் பேச்சு.
11.40am: டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி இது - டெல்லி முதல்வர் ட்வீட்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பினை அடுத்து, தன்னுடைய ட்விட்டர் பகுதியில் மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளார்.
A big victory for the people of Delhi...a big victory for democracy...
— Arvind Kejriwal (@ArvindKejriwal) 4 July 2018
11.30am: தீர்ப்பில் இடம்பெற்ற முக்கியக் கருத்துகள்
1. டெல்லி மற்ற மாநிலங்கள் போல் செயல்படாது
2. டெல்லி ஆளுநர் மற்ற மாநிலங்களின் ஆளுநர் போல் இல்லை. அவர் தன்னிச்சையாக செயல்பட இயலாது. மேலும் மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு தடையாக இருக்கக் கூடாது. மாநில அமைச்சகத்துடன் பேசி ஒரு முடிவினை அவர் எடுக்கலாம்.
3. டெல்லியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க பாராளுமன்றத்திற்கு முழு உரிமையும் உண்டு
4. நிலம், காவல், மற்றும் பொதுத்துறை தவிர புதிய முடிவுகளை எடுக்க டெல்லி மாநில அரசுக்கு முழு அதிகாரமும் உண்டு
5. ஒற்றை ஆட்சி முறை என்பதற்கு நம் அரசியல் சாசனத்தில் இடம் இல்லை
6. இந்திய அரசியல் சாசனத்தை மதித்து ஆளுநரும் முதலமைச்சரும் சேர்ந்து செயல்பட வேண்டும்.
11:20am: மாநில அரசு தான் மக்களுக்கு பதில் அளிக்கக் கூடிய இடத்தில் இருக்கின்றது
நீதிபதி சந்திரசுட் அவருடைய தீர்ப்பில் “ மக்களின் நலனிற்காக எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்திற்கும் ஆளுநரின் அனுமதி தேவையில்லை என்பதை ஆளுநர் பைஜால் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாநில அரசே பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
11:10am: டெல்லி மற்ற மாநிலங்களைப் போல் கிடையாது!
இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களில் இருக்கும் ஆளுநர் போல் அனில் பைஜால் டெல்லியில் செயல்பட இயலாது. டெல்லி மற்ற மாநிலங்களைப் போல் இல்லை. நிலம், கொள்கை, மற்றும் காவல் போன்ற துறைகளை தவிர மற்ற அனைத்திலும் மாநில அரசு மாற்றம் கொண்டு வரலாம். டெல்லியில் ஒரு முக்கிய முடிவினை எடுக்க பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.
11.00am: ஆளுநரால் தன்னிச்சையாக செயல்பட இயலாது - தீபக் மிஸ்ரா
மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டும். அனில் பைஜால் மத்திய அமைச்சர்களுடன் பேசி ஒரு தீர்வினை எடுக்கலாம், ஆனால் தன்னிச்சையாக எந்த ஒரு முடிவினையும் எடுக்க இயலாது. எழுத்துப் பூர்வமாக மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்ற பின்பே ஆளுநர் செயல்பட இயலும்.
10:50am: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னுடைய தீர்ப்பினை வாசிக்கின்றார்.
சில நாட்களுக்கு முன்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மற்றும் சில முக்கிய அமைச்சர்கள், ஆளுநரின் வரவேற்பரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதைப்பற்றி தொடர்ந்து படிக்க ஆளுநர் வீட்டில் இருக்கும் கெஜ்ரிவாலின் திட்டம் என்ன?
10:40am: இது தான் முதல் அதிகாரப் போரா?
டெல்லி ஆளுநர்களுக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையே அதிகாரப் போர் நடைபெறவது வழக்கமே. ஷீலா தீக்சித் ஆட்சியில் இருந்த போது, அவரின் காங்கிரஸ் கட்சியே மத்தியிலும் ஆட்சி செய்தது. அப்போதும் அதிகாரம் தொடர்பாக பிரச்சனைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
10:30am: ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் களம் இறங்கும் மூத்த வழக்குரைஞர்கள்
ஆம் ஆத்மி அரசின் சார்பாக மூத்த வழக்குரைஞர்கள் பி. சிதம்பரம், கோபால் சுப்ரமணியம், ராஜீவ் தவான், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் இதில் பங்கேற்கின்றார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.