கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு (Economically weaker sections (EWS) from non-backward castes) 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 7) தீர்ப்பு வழங்கியது.
வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ். ரவீந்திர பட், பேலா எம். திரிவேதி மற்றும் ஜே. பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் 3 நீதிபதிகள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பும், 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பும் வழங்கினர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அரசியலமைப்பு சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் மேற்கொண்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பில், "EWS இடஒதுக்கீடு அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை. 50% இட ஒதுக்கீடு நடைமுறையையும் மீறவில்ல" என்று கூறினார்.
தொடர்ந்து பேலா எம். திரிவேதியும் இதை உறுதிப்படுத்தினார். "சாதி அமைப்பால் உருவான ஏற்றத்தாழ்வுகளை போக்க இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அரசியலமைப்பு இக்காலச் சூழலுக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறினார். நீதிபதி ஜே. பி. பர்திவாலா 10% இடஒதுக்கீட்டை ஆதரித்து தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதி ரவீந்திர பட் மேற்கூறிய நீதிபதிகளின் தீர்ப்புக்கு மறுப்பு தெரிவித்தார்."இந்த இடஒதுக்கீடு 50% உச்ச வரம்பை மீற அனுமதிக்கிறது. மற்ற விதிமீறல்களுக்கும் வழிவகுக்கும். பிரிவினையை உருவாக்கும்" என்றார்.
தலைமை நீதிபதி லலித்தும் நீதிபதி பட்டின் கருத்தை ஏற்றார். இதன் மூலம் இந்த விவகாரத்தில் 3-2 என தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil