Advertisment

தன் பாலின திருமணத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு; வழக்கு கடந்து வந்த பாதை

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரும் மனுக்கள் தொடர்பான விசாரணையில் தன் பாலின திருமணத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு; வழக்கில் இதுவரை நடந்தவை இங்கே

author-image
WebDesk
New Update
same sex timeline

வதோதராவில் ஃபோரம் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட LGBTQ+ இன் பெருமை அணிவகுப்பு. (எக்ஸ்பிரஸ் கோப்பு புகைப்படம்: பூபேந்திர ராணா)

இந்தியாவில் திருமண சமத்துவம் கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ் நரசிம்ஹா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தன் பாலின திருமணத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: SC verdict on same-sex marriages today: A timeline

இந்தநிலையில், ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரும் மனுக்கள் தொடர்பான இந்த வழக்கில் இதுவரை நடந்தவற்றை காலவரிசையோடு இங்கே பார்க்கலாம்

நவம்பர் 25, 2022: இரண்டு ஓரினச்சேர்க்கை தம்பதிகளான சுப்ரியோ சக்ரவர்த்தி - அபய் டாங் மற்றும் பார்த் ஃபிரோஸ் மெஹ்ரோத்ரா - உதய் ராஜ் ஆனந்த் ஆகியோர், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, இந்த மனுக்கள் மீது மத்திய அரசுக்கும், இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

டிசம்பர் 14: இந்தியாவில் தங்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி ஓரினச்சேர்க்கை ஜோடியின் மற்றொரு மனு மீது உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்தியாவைச் சேர்ந்த 46 வயதான மனுதாரர், அவர் செப்டம்பர் 2010 இல் அமெரிக்காவில் ஒரு அமெரிக்க குடிமகனை திருமணம் செய்து கொண்டதாகவும், ஜூன் 2014 இல் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தங்கள் திருமணத்தை பதிவு செய்ததாகவும் கூறினார். புனேவில் வசித்துவரும் இந்தத் தம்பதி, திருமணப் பதிவாளர் தங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், இந்து திருமணச் சட்டம், 1955 இன் கீழ் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாக இருவரும் தெரிவித்தனர்.

ஜனவரி 6, 2023: நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய அனைத்து மனுக்களையும் தன்னிடம் மாற்றிக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதுபோன்ற பல மனுக்கள் டெல்லி மற்றும் கேரள உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன. மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நேரடியாக விசாரிக்கும் வகையில், உயர்நீதிமன்றங்களில் இருந்து இந்த மனுக்களை மாற்றக் கோரினார்.

சிறப்புத் திருமணச் சட்டம், வெளிநாட்டுத் திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கக் கோரிய இந்த மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 13ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், இந்த மனுக்கள் மீதான பதிலை பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், மனுதாரர்களுக்கு வழக்கறிஞர் அருந்ததி கட்ஜு, அரசு தரப்புக்கு வழக்கறிஞர் கனு அகர்வால் ஆகியோரை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

ஜனவரி 30, பிப்ரவரி 10, பிப்ரவரி 20 மற்றும் மார்ச் 3: உச்சநீதிமன்றம் இதுபோன்ற மேலும் சில மனுக்கள் மீது நோட்டீஸ்களை வெளியிட்டு அவற்றை முதன்மை வழக்குடன் இணைத்தது.

மார்ச் 12: ஒரே பாலின திருமணத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது, “இந்திய சட்டப்பூர்வ மற்றும் தனிப்பட்ட சட்ட ஆட்சியில் திருமணம் பற்றிய சட்டப்பூர்வ புரிதல்என்பது உயிரியல் ரீதியான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தை மட்டுமே குறிக்கிறது. அதில் எந்தவொரு தலையீடும் "நாட்டில் தனிப்பட்ட சட்டங்களின் நுட்பமான சமநிலை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக மதிப்புகளில் முழுமையான அழிவை ஏற்படுத்தும்" என்று மத்திய அரசு கூறியது.

மார்ச் 13: இந்த விவகாரம் "முக்கியத்துவம் வாய்ந்த" கேள்விகளை எழுப்புகிறது என்று கூறி, ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. அதன் உத்தரவில், தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், இந்த பிரச்சினையில் சமர்ப்பிப்புகள் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் திருநங்கைகளின் உரிமைகள் தவிர சிறப்பு திருமணச் சட்டம் உள்ளிட்ட குறிப்பிட்ட சட்டங்களுக்கு இடையிலான தொடர்புகளை உள்ளடக்கியது என்று கூறியது.

ஏப்ரல் 1: ஜமியத்-உலமா-இ-ஹிந்த் எனப்படும் இஸ்லாமிய அறிஞர்களின் அமைப்பு, ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரிக்கக் கோரும் மனுக்களை எதிர்த்தது. JUIH தனது மனுவில், “இஸ்லாத்தின் ஓரினச்சேர்க்கை தடை என்பது இஸ்லாமிய மதத்தின் தொடக்கத்திலிருந்தே திட்டவட்டமாக உள்ளது. ஓரினச்சேர்க்கை மீதான தடை தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மறுக்க முடியாதது மற்றும் நிறுவப்பட்டது,” என்று தெரிவித்தது.

ஏப்ரல் 6: டெல்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் திருமணத்தை அங்கீகரிப்பதற்காக வாதிட்டது, குழந்தைகளுக்கு இதுபோன்ற திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நீதிமன்றத்திற்கு உதவ தலையீட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது.

ஏப்ரல் 15: ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ரவீந்திர பட், ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமைந்தது.

ஏப்ரல் 17: இந்தியாவின் தேசிய குழந்தை உரிமைகள் அமைப்பான குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR), ஒரே பாலின தம்பதிகள் விவகாரத்தில் தத்தெடுப்பு பற்றிய கவலைகளை எழுப்பியது. இந்து திருமணச் சட்டம், 1955 மற்றும் சிறார் நீதிச் சட்டம், 2015 போன்ற சட்டங்கள் ஒரே பாலினத் தம்பதிகள் தத்தெடுப்பதை அங்கீகரிக்கவில்லை என்று NCPCR சமர்ப்பித்தது. சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தையை வயது வந்த ஒரு ஆண் தத்தெடுப்பதிற்கு உள்ள தடையை NCPCR சுட்டிக்காட்டியது, மேலும் "ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுப்பதற்கு அனுமதிப்பது சட்டத்தின் திட்டத்திற்கு எதிரானது" என்றும் கூறியதாக லைவ் லா தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 18: ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான மனுக்களின் தொகுப்பை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கத் தொடங்கியது. LGBTQ சமூகத்தின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவதாக மனுதாரர்கள் வாதிட்ட நிலையில், ஒரே பாலின திருமணம் கோரிய மனுக்களை நீதிமன்றத்தில் விசாரிக்க அரசு முதற்கட்ட ஆட்சேபனைகளை எழுப்பியது.

பெஞ்ச் தனிப்பட்ட சட்டங்களின் பகுதியிலிருந்து விலகிச் செல்வதாகக் கூறியது, ஆனால் சிறப்பு திருமணச் சட்டம் (SMA), 1954 இன் கீழ் உரிமை வழங்கப்படுமா என்பதை மட்டுமே ஆராய்வோம் என்று தெரிவித்தது. முக்கியமாக, திருமணத்தின் "சட்டப்பூர்வ நோக்கம்" என்ற வாதத்திற்கு பதிலளிக்கும் வகையில் "உயிரியல் ரீதியான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு", உச்ச நீதிமன்றம் ஒரு ஆண் அல்லது பெண் என்ற "முழுமையான கருத்து இல்லை" என்று அடிக்கோடிட்டுக் காட்டியது. பெஞ்ச், சிறப்பு திருமணச் சட்டத்திற்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகவும், விசாரணையை விரிவுபடுத்தாது என்றும் கூறி, அதை ஒன்றாகச் சமாளிப்பதை விட, படிப்படியாகத் தொடர்வது நல்லது என்று தெரிவித்தது.

மே 11: 10 நாட்கள் நடந்த விசாரணையில் தீர்ப்பை பெஞ்ச் ஒத்திவைத்தது

அக்டோபர் 17: ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கக் கோரிய மனுக்கள் தொடர்பான வழக்கில், தன் பாலின திருமணத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Supreme Court Lgbtqa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment