SC warns Karti Chidambaram : முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு 10 கோடி ரூபாய் உத்தரவாதத்துடன் வெளிநாடு செல்ல அனுமதி அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் - ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக இவர் மீது அமலாக்கத்துறையில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கார்த்திக் சிதம்பரத்திற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
வெளிநாடு செல்ல கோரிக்கை விடுத்த கார்த்தி சிதம்பரம்
இந்நிலையில் ஃப்ரான்ஸ், ஸ்பெய்ன், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அடுத்து சில மாதங்கள் நடைபெற இருக்கும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் கார்த்தி சிதம்பரம்.
இந்த சர்வதேச டென்னிஸ் விளையாட்டு நிகழ்வுகளை இங்கிலாந்தில் இருக்கும் டோட்டூஸ் டென்னிஸ் லிமிட்டட் என்ற நிறுவனம் நடத்துகிறது.
எச்சரிக்கை செய்த உச்ச நீதிமன்றம்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய நீதி அமர்வில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவினை விசாரித்த நீதிபதிகள் 10 கோடி ரூபாய் உத்தரவாதத்துடன் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி அளித்ததோடு, அமலாக்கத்துறை எப்போது நேரில் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பினாலும் மீண்டும் இந்தியா வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெளிநாடு செல்ல ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது.
தற்போது எந்தெந்த நாட்களில் அமலாக்கத்துறையின் விசாரணை நடைபெறும் என்ற கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். மார்ச் மாதம் 5,67,மற்றும் 12 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற உள்ளது. அந்த தேதிகளில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ரஞ்சன் கோகாய் கார்த்தியிடம் “ உங்களுக்கு எங்கே செல்ல வேண்டுமோ செல்லுங்கள், என்ன செய்யத் தோன்றுகிறதோ செய்யுங்கள். ஆனால் ஒரு போதும் சட்டங்களுடன் விளையாட வேண்டாம். உங்களிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றால் அதனால் இங்கு ஏற்படும் விளைவுகள் அதிகமாக இருக்கும்” என்று எச்சரிக்கையுடன் இந்த அனுமதியை அளித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க