ஜன்னல் மற்றும் கதவுகளின் உடைந்த கண்ணாடி; கண்ணீர்ப்புகை குண்டுகளின் மீதங்கள்; தரையில் அங்குமிங்குமான சிதறக் கிடந்த இரத்த சொட்டுகள்; அடித்து நொறுக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள், கிழிக்கப்பட்ட புத்தகங்கள் இவைகளே கடந்த திங்கட்கிழமை ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் காட்சியாக இருந்தன. இந்த காட்சிகள்யெல்லாம் அதற்கு முந்தைய நாளில், பல்கலைக்கழகத்துற்குள் டெல்லி போலீஸ் நடவடிக்கையின் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
புதிய கட்டிடம், பழைய கட்டிடம் என ஜாமியாவுக்கு இரண்டு நூலக கட்டிடங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாணவர்கள் புத்தக வாசிப்பிற்காக திறந்து வைக்கப்பட்டிருந்தன. மாலை 6:30 மணியளவில் இந்த நூலகத்தில் இருந்த அமைதியுடைந்து அசாதரன சூழல் உருவாகியதாக மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் காவலர்கள் தெரிவித்தனர்.
“நான் நமாஸ் படித்து விட்டு நூலகம் வந்தேன். மாலை 6:30 மணியளவில், காவல்துறை வாசிப்பு அறைக்குள் நுழைந்து மேசைகளை உடைத்து, மாணவர்களை லத்தியால் தாக்கத் தொடங்கியது. கண்ணீர்ப்புகை வீசப்பட்டது. நான் ஓட முயற்சித்தேன், ஆனால் மறைய இடமில்லை. அருகில் உதவிகோரிய என் நண்பருக்கு உதவ முயற்சித்தபோது, என் கையில் அடிபட்டது, ”என்று சாஹில் ரப்பானி கூறினார். ரப்பானி தனது நோட்புக் மற்றும் பாடப் பொருள்களை நூலக அறையில் விட்டுவிட்டு ஓடினார்.
போலிசார் நுழைந்ததாகக் கூறப்படும் இரண்டு கதவுகளும் உடைந்துள்ளன; வாசிப்பு அறைக்கு சற்று முன்பாக இருந்த ‘புதிய வருகை’ காண்பிக்கும் கண்ணாடி அட்டையும் உடைக்கப்பட்டுள்ளது.
பாதியாக உடைந்த ஜன்னல் ஒன்றில், பல ஆடைகள் சிக்கிக் கொண்டிருந்தன. அவசரமாக, மாணவர்கள தப்பிக்க முயன்றபோது ஜன்னலில் சிக்கியிருக்கலாம் என்ற பொருள் கொள்ளப்படுகிறது.
“போலீசார் கதவுகளை மூடியதால் மாணவர்கள் கண்ணீர் புகை குண்டில் சிக்கிக்கொண்டனர். எங்கும் செல்ல முடியாத நிலையில், ஜன்னல்களை உடைத்து தப்பிக்க முயன்றனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன, உடைகள் கிழிந்தன ”என்று ஒரு அதிகாரி கூறினார்.
நூலக அறையில் காயம் அடைந்த மாணவர்கள் போலிஸ் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, முதல் மாடிக்கு படிக்கட்டுகளில் ஏறிச் சென்றதாக நூலக ஊழியர் அட்னன் தெரிவித்தார்.
பழைய கட்டிடத்தில், பிரதான கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன, எல்லா இடங்களிலும் காகிதங்கள் கிழித்து எறியப்பட்டன.வாசிப்பு அறையின் தளத்தில் இரண்டு சி.சி.டி.வி கேமராக்களும், உடைந்த லத்தியும் இருந்தன. இரண்டாவது மாடியில் ஒரு நாற்காலியில் இரத்தக் கறையும் படிந்திருந்தன.
போலிஸ் சோதனைக்கு பின் 50-60 மாணவர்கள், தங்களை காத்துக்கொள்ள மறைவான இடத்தில் பதுங்கியதை கண்டதாக நூலக ஊழியரான மொஹமட் உஸ்மான் தெரிவித்தார். “11 மாணவர்கள் கழிப்பறைகளில் மறைந்திருந்தனர், ஒன்பது மாணவர்கள் புதிய கட்டிடத்திலும் இரண்டு மாணவர்கள் பழைய கட்டிடத்திலும் இருந்தனர். அவர்களில் நான்கு பேர் பெண்கள். இருவரால் நடக்க முடியவில்லை; அவர்கள் மோசமான நிலையில் இருந்தனர். நாங்கள் அவர்களை ஆம்புலன்சுகளில் ஏற்றினோம், ”என்று கூறினார்.