Advertisment

’இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம்’; வங்கதேச ஜமாத் பொதுச் செயலாளர் சிறப்பு பேட்டி

“ஜமாத் ஒரு தீவிரவாத, அடிப்படைவாத மற்றும் வகுப்புவாத கட்சி என்ற தவறான கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. எங்களை அப்படி முத்திரை குத்திவிட்டார்கள்” – வங்கதேச ஜமாத்தின் பொதுச்செயலாளர் கோலம் பர்வார்

author-image
WebDesk
New Update
kolam parwar

வங்கதேச ஜமாத்தின் பொதுச்செயலாளர் கோலம் பர்வார்

Shubhajit Roy

Advertisment

தனது அமைப்பு "இந்தியா மற்றும் இந்திய மக்களின் நண்பனாக" இருக்கும் என்று கூறிய, தடை செய்யப்பட்ட, பங்களாதேஷின் முதன்மையான இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் பொதுச்செயலாளர், தனது அமைப்பு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்காது, இந்தியா-வங்காள எல்லைகள் நிலையானதாக இருக்கும், மேலும் அந்த அமைப்பால் எந்த பயங்கரவாத நடவடிக்கையும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்க: Secretary General Golam Parwar interview: Jamaat says won’t be threat to India; but it’s easier said than done

2001-2006 க்கு இடையில் ஜமாத்-இ-இஸ்லாமியின் முன்னாள் எம்.பி.யாக இருந்த கோலம் பர்வார், ஜூலை 20 அன்று ஷேக் ஹசீனா அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார் மற்றும் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடிய இரண்டு நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். இங்கே தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு கோலம் பர்வார் அளித்த பேட்டியில், “இந்தியா ஒரு நட்பு நாடு... இந்திய மக்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல. மோடி அரசின் கொள்கை அவாமி லீக் அல்லாத கட்சிகளை இந்தியாவுக்கு எதிரான கட்சிகளாக சித்தரித்தது. அவாமி லீக் கட்சியால் மட்டுமே தங்களைக் காப்பாற்ற முடியும் என்றும், எங்களைப் போன்ற இஸ்லாமியக் கட்சிகள் வந்தால் பயங்கரவாதிகளின் விளைநிலமாக மாறிவிடும் என்றும் நினைக்கிறார்கள். இது தவறான கருத்து,” என்று கூறினார்.

2020 ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்து வரும் கோலம் பர்வார் கூறுகையில், "இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம், எல்லைகள் நிலையானதாக இருக்கும், எங்கள் தரப்பில் இருந்து எந்த பயங்கரவாத நடவடிக்கையும் இருக்காது என்று இந்திய மக்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்,” என்று கூறினார். 2013 இல் இந்த அமைப்பின் பதிவு நீக்கபட்டதால், தேர்தலில் போட்டியிட தகுதி பெறவில்லை.

அதேநேரம், ஜமாத்தின் தற்போதைய மனமாற்றம் எளிதாக தெரியலாம், ஆனால் உள்நாட்டு அரசியலில் அமைப்பின் முந்தைய செயல்பாடுகளைக் கணக்கில் கொண்டால், அது சிக்கல்கள் நிறைந்தது இது அதன் கடுமையான சித்தாந்தத்தால் வரையறுக்கப்படுகிறது, மேலும் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் பல பாதுகாப்பு சவாலாக இருக்கும் பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கு அதன் ஆதரவைக் காட்டுகிறது. தடை செய்யப்பட்ட அமைப்பான ஜமாத் உடனான ஈடுபாட்டின் வரையறைகளை நிர்ணயிப்பது இடைக்கால அரசாங்கத்திற்கு சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறை மற்றும் கடலோர காவல்படையினர் 10 லாரிகளை இடைமறித்து, சிட்டகாங் யூரியா உரங்களின் ஜெட்டியில் விரிவான சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியபோது, ஏப்ரல் 1, 2004 அன்று இரவு சட்டோகிராமில் 10-டிரக் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்தியதற்காக ஜமாத் தலைவரும் அப்போதைய தொழில்துறை அமைச்சருமான மோதியுர் ரஹ்மான் நிஜாமிக்கு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உல்ஃபா உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நாட்டின் விடுதலைப் போரின் போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக பங்களாதேஷ் உச்ச நீதிமன்றம் அவரது மரண தண்டனையை உறுதி செய்த பின்னர், மே 11, 2016 அன்று நிஜாமி தூக்கிலிடப்பட்டார்.

1986 முதல் ஜமாத்தில் இருந்து வரும், 66 வயதான கோலம் பர்வார், கணக்கியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஜமாத்-இ-இஸ்லாமி சார்பு வெளியீடான டைனிக் சங்க்ராமின் முதல் மாடி அலுவலகத்தில் பங்களா செய்தித்தாள்கள் அடங்கிய ஒரு நோட்டுப் புத்தகத்துடன், நேர்காணலுக்கான தகவல்களை கோலம் பர்வார் தயார் செய்துக் கொண்டிருந்தார். அவர் மேஜையில் இரண்டு ஐபோன்களை வைத்திருக்கிறார், மேலும் காவல்துறையின் துன்புறுத்தல் காரணமாக தொலைபேசிகளை மாற்ற வேண்டியதாகிவிட்டது என்று கூறினார். நுழைவாயிலில் ஒரு தனி காவலரைத் தவிர, அலுவலகத்திற்கு அதிக பாதுகாப்பு இல்லை, அங்கு சிலர் அவரைச் சந்திக்க காத்திருக்கிறார்கள்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதை ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொலைக்காட்சியில் பார்த்தபோது கோலம் பர்வார் சிறையில் இருந்தார். "சிறையில் காட்சிகள் மற்றும் செய்திகளை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன், அவாமி லீக்கின் கீழ் இருண்ட காலம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது," என்று கோலம் பர்வார் கூறினார்.

ஆகஸ்ட் 5 முதல் இந்துக்களுக்கு எதிரான வன்முறையில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது பற்றி கேட்டதற்கு, அந்த சம்பவங்களுக்கும் ஜமாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோலம் பர்வார் மறுத்தார். “அவர்கள் (தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ளவர்கள்) கிரிமினல் கூறுகள், அவர்கள் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சிலர் கடந்தகால விரோதம், சில உள்ளூர் மோதல்கள், அவர்கள் சட்டத்தின்படி கையாளப்பட வேண்டும். அதிகாரிகள் விசாரணை செய்து நீதி வழங்க வேண்டும்… இஸ்லாமிய தத்துவத்தின்படி, எங்கள் சகோதரர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதை நாங்கள் நம்பவில்லை,” என்று கோலம் பர்வார் கூறினார்.

2013 இல் பதிவு நீக்கப்பட்டு ஆகஸ்ட் 1, 2024 அன்று தடை செய்யப்பட்ட வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமியின் அமீர் (தலைவர்) ஷஃபிகுர் ரஹ்மான் தாகேஸ்வரி கோவிலுக்குச் சென்று இந்து சிறுபான்மை குழுக்களைச் சந்தித்தார்.

இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் பதிவாகி வருவதால் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்களை சந்தித்த இந்து சிறுபான்மை தலைவர் பாசுதேப் தார், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார், “நீங்கள் ஒரு வகுப்புவாத மற்றும் அடிப்படைவாத குழுவாக இருப்பதாக ஜமாத் தலைவர்களிடம் கூறினேன். உங்களை வேறுவிதமாக நிரூபிக்க இதுவே உங்களுக்கு வாய்ப்பு. ஷேக் ஹசீனா அரசாங்கம் வீழ்ச்சியடைந்த முதல் சில நாட்களில் வன்முறை வெடித்ததாலும், காவல்துறை வராததாலும் கோவிலின் காவலுக்கு ஜமாத் தனது மக்களை அனுப்பியதாக பாசுதேப் தார் கூறினார்.

ஜமாத்தின் பொதுச்செயலாளர் கோலம் பர்வார் மேலும் கூறுகையில், “ஜமாத் ஒரு தீவிரவாத, அடிப்படைவாத மற்றும் வகுப்புவாத கட்சி என்ற தவறான கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. எங்களை அப்படி முத்திரை குத்திவிட்டார்கள்,” என்றார்.

ஜமாத்-இ-இஸ்லாமிக்கும் ஹுஜி (ஹர்கத்-உல்-ஜிஹாத் அல்-இஸ்லாமி) போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் மற்றும் பிற அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து கேட்டபோது, "ஜமாத்-இ-இஸ்லாமிக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்றார். .

வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP)-ஜமாத் கூட்டணி ஆட்சியில், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்கள் நடந்த 2001-2006 காலகட்டம் குறித்து கேட்டபோது, ”60 பேரில் நாங்கள் இரண்டு அமைச்சர்களுடன் மட்டும் இருந்தோம், 200-ல் 20 இடங்களில் மட்டுமே வென்று இருந்தோம், எனவே எங்கள் செல்வாக்கு விகிதாச்சாரத்தில் குறைவாகவே இருந்தது. சம்பவங்கள் இருந்தன ஆனால் அவை குற்றச் செயல்கள். அப்போது ஜமாத் -இ இஸ்லாமி தொண்டர்களின் தலையீடு இல்லை, இப்போதும் இந்துக்களுக்கோ கோவில்களுக்கோ எதிரான எங்கள் தொண்டர்களின் ஈடுபாடும் இல்லை. அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதற்குக் காரணம் இஸ்லாமியத் தத்துவம், நமது ஈமான் மீதான நமது அர்ப்பணிப்புதான்,” என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 2005 இல், வங்காளதேசம் முழுவதும் அதன் 64 மாவட்டங்களில் 63ல் 300 இடங்களில் சுமார் 500 குண்டுவெடிப்புகள் நடந்தன. ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB), அல் கொய்தாவுடன் இணைந்த குழு, குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றது. ஹர்கத்-உல்-ஜிஹாத் அல்-இஸ்லாமி (வங்காளதேசம்) குண்டுவெடிப்புகளை நடத்துவதில் ஜே.எம்.பி உடன் ஒத்துழைத்தது.

பி.என்.பி கூட்டணி அரசாங்கம் பிரதம மந்திரி கலிதா ஜியா தலைமையில் இருந்தபோது குண்டுவெடிப்புகள் நடந்தன, அந்த காலகட்டம் தீவிர இஸ்லாமிய செல்வாக்கின் கூர்மையான எழுச்சியால் குறிக்கப்பட்டது.

திருக்குர்ஆனில் உள்ள ஒரு சூரா (அத்தியாயம்) வசனங்களை மேற்கோள் காட்டி, இஸ்லாமிய கட்சி ஆட்சி அமைக்கும் போது, அவர்கள் "சமத்துவம், மனித கண்ணியம் மற்றும் சமூக நீதியை" பின்பற்ற வேண்டும் என்று கூறினார். "இது அனைத்து மனிதகுலத்திற்கும், அனைத்து இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் பிற குழுக்களுக்கானது" என்று கோலம் பர்வார் கூறினார், ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் 16 ஆண்டுகளில் ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் சிறையிலும் வெளியேயும் இருந்ததாகக் கூறினார், அங்கு "சமத்துவம், மனித கண்ணியம் மற்றும் சமூக நீதி" என்ற கொள்கைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அவாமி லீக் ஆட்சி "எதிர்க்கட்சிக்கு ஒரு இருண்ட காலம்" என்று அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், பிரதமர் இல்லமான கானா பாபனுக்குள் மக்கள் நுழைந்ததை உலகம் கண்டது "16 ஆண்டுகால கோபத்தின் வெடிப்பு" என்று கூறினார்.

மாணவர்கள் வேலை கேட்டு போராட்டம் நடத்துவதாகவும், "எங்களுக்கு தகுதியான வேலைகள் எங்கே" என்று அவர்கள் வெறுமனே கேட்கிறார்கள் என்றும் அவர் கூறினார். "ஹசீனா அவர்களை ரசாக்கர்கள் என்று திட்டியது பெரிய தவறு," என்று அவர் கூறினார்.

ஹசீனாவுக்கு இந்தியாவின் ஆதரவை விமர்சித்த கோலம் பர்வார், இந்திய புலனாய்வு முகமைகள் (நிலையான சூழ்நிலையை புரிந்து கொள்ளத் தவறிவிட்டன) என்றார். இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கோலம் பர்வார், “பொதுவெளியில் அவ்வாறு கூறாமல், அவர்கள் (இந்திய அதிகாரிகள்) தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்வது போல் தெரிகிறது” என்றார்.

போராட்டங்களில் ஜமாத்-இ-இஸ்லாமியின் பங்கு குறித்து கேட்டதற்கு, அவர் கூறினார்: “எங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் பலர் கலந்துகொண்டனர். நாங்கள் எங்கள் ஆதரவை வழங்கினோம் ஆனால் அது மாணவர்கள் மற்றும் மக்கள் இயக்கம். நாங்கள் அறிக்கைகள் கொடுத்தோம், ஆனால் வன்முறையில் ஈடுபடவில்லை.”

கட்சி மீதான தடையின் நிலை குறித்து கேட்டதற்கு, பர்வார், “ஆகஸ்ட் 1ஆம் தேதி, போராட்டங்களின் உச்சக்கட்டத்தில் நாங்கள் தடை செய்யப்பட்டோம், நான்கு நாட்களுக்குப் பிறகு, ஹசீனா அரசாங்கம் கவிழ்ந்தது. எங்கள் மீது போடப்பட்டுள்ள தடையை ரத்து செய்ய வேண்டும் என்று இடைக்கால அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பார்க்கலாம்." என்றார்.

அவரது உதவியாளர் நிருபருடன் வெளியேறும் போது, அலுவலகத்திற்குள் நுழைந்த 30 வயது நபர், உதவியாளரிடம், "இப்போது நீங்கள் ஆட்சிக்கு வரப் போகிறீர்கள், தயவுசெய்து எங்கள் வேலையைச் செய்யுங்கள்" என்று கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Muslim India Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment