ஓரினச்சேர்க்கை குற்றமா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும்: மத்திய அரசு கருத்து !

ஆணோ, பெண்ணோ அவர்களின் துணையை தேர்ந்தெடுப்பது அவரவர்களின் தனிப்பட்ட சுதந்திரம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ஓரினச் சேர்க்கை வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. இதற்கான வாதத்தில் இன்று 2 தரப்புகளும் பரபரப்பான கருத்து மோதலில் ஈடுப்பட்டன.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவின்படி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது இயற்கைக்கு மாறான குற்றமாக கருதப்படுகிறது. இதன்படி, வயதுக்கு வந்த 2 ஆண்களோ அல்லது பெண்களோ ஓரினச் சேர்க்கையில்  ஈடுபட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது 10 ஆண்டு சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்க முடியும். ஆனால், கடந்த 2009ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்று கூறி தீர்ப்பை வெளியிட்டது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2013ல் அளித்த தீர்ப்பில்,` ஓரினசேர்க்கையில் ஈடுபடுவது குற்றச்செயல்’ என அதிரடியாக உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடனக்கலைஞர் நவ்தீஜ் ஜவ்கர் உள்பட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு புதிதாக அமைக்கப்பட்டது. தன்பாலின உறவு விவகாரம் உட்பட 4 முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த அமர்வு நேற்று(10.7.18) முதல் விசாரணையை துவக்கி உள்ளது. மத்திய அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைக்க முடியாது, திட்டமிட்டபடி வழக்கு விசாரணை நடக்கும் என உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கன்வில்கர் சந்திராசூட்,இந்து மல்கோத்ரா ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் நடனக்கலைஞர்க நவ்தேஜ் ஜவ்கர் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கடந்த 2017ம் ஆண்டு 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ஓரினச் சேர்க்கையாளர்களின் அடிப்படை மற்றும் தனிப்பட்ட உரிமையை மறுக்க முடியாது. ஆணோ, பெண்ணோ அவர்களின் துணையை தேர்ந்தெடுப்பது அவரவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். எனவே, பாலியியல் சுதந்திர உரிமை குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்று தனது தரப்பு கோரிக்கையை முன் வைத்தார்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வாழ்க்கையின் அடிப்படை உரிமை, பாலியியல் சுதந்திரம் குறித்தும், உச்சநீதிமன்றம் 2013ம் ஆண்டு அளித்த தீர்ப்பை சரிசெய்வது பற்றியும் ஆய்வு செய்வோம் என்று கூறினர். அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேதா, ‘அரசு இது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்காது. நீதிமன்றத்தின் முடிவுக்கே இந்த விஷயத்தை விட்டு விடுகிறோம்’ என்று கூறினார்.

உலக பார்வையில் ஓரினச் சேர்க்கை:

ஐ.நா கணக்குப்படி, உலகெங்கும் 76-க்கும் மேலான நாடுகளில் ஒரினச் சேர்க்கையானது சட்டப்படி குற்றம்.ஐந்து நாடுகள் இதற்கு மரண தண்டனை வழங்குகின்றன.ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்வது, அங்கீகரிப்பது உலகம் முழுவதும் மெல்ல அதிகரித்து வருகிறது. அதே போல் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர்.

×Close
×Close