துணை ராணுவப் படையினர் மற்றும் டெல்லி காவல்துறையின் பல குழுக்கள் அவரது வீட்டில் வெளியே பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வலதுசாரி குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறைக்கு வந்த தகவலையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டிற்கு டெல்லி காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது என்று மூத்த அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
பிற்பகல் வேளையில் அப்பகுதியில் பதற்றம் ஏற்படக்கூடும் என கிடைத்த ரகசிய தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.
லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தனது முதல் உரையில், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் “வன்முறையிலும் வெறுப்பிலும்” ஈடுபடுகிறார்கள் என்று பா.ஜ.கவைக் கடுமையாகத் தாக்கியதைத் தொடர்ந்து இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது.
இந்த கருத்துக்கு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்ததாக குற்றம் சாட்டி வருகின்றனர். 18-வது மக்களவைக் கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தில் ராகுல் காந்தி சுமார் 100 நிமிடங்கள் உரையாற்றினார். இருப்பினும் ராகுல் தெரிவித்த பல கருத்துகளை நாடாளுமன்றக் குறிப்பில் இருந்து நீக்குவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
பா.ஜ.க, இந்து மதம் பற்றிய கருத்துகள், நரேந்திர மோடி அரசாங்கத்தில் காங்கிரஸ் அடிக்கடி குறிப்பிடும் சில முக்கிய தொழிலதிபர்கள் பற்றிய கருத்துகள், அக்னிபாத் திட்டம், நீட் விவகாரம், மணிப்பூர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பற்றி ராகுல் பேசிய கருத்துகள் நாடாளுமன்றக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“